< Back
மாநில செய்திகள்
கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் ரத்தின கற்கள் சிக்கியது - இலங்கை வாலிபர் கைது
சென்னை
மாநில செய்திகள்

கொழும்பில் இருந்து கடத்தல் சென்னை விமான நிலையத்தில் ரூ.94 லட்சம் ரத்தின கற்கள் சிக்கியது - இலங்கை வாலிபர் கைது

தினத்தந்தி
|
24 July 2022 10:54 AM IST

கொழும்பில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.94 லட்சம் மதிப்புள்ள ரத்தின கற்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு பெரும் அளவில் கடத்தல் பொருட்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா முதன்மை கமிஷனர் உதய்பாஸ்கருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் விமான பயணிகளை ரகசியமாக கண்காணித்தனர். அப்போது கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்து இறங்கிய விமானத்தில் பயணம் செய்த பயணிகளை தீவிரமாக சோதனையிட்டனர். அதில், இலங்கையை சேர்ந்த நைமுதீன் (வயது 28) என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் சிக்கவில்லை. ஆனால் அவரை ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் சிறிய பாக்கெட்டுகளாக ரத்தின கற்களை விழுங்கியது தெரியவந்தது.

பின்னர் அவருக்கு இனிமா கொடுத்து அவற்றை வெளியே எடுத்த போது 56 சிறிய பாக்கெட்டுகளில் பளபளக்கும் ரத்தின கற்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அவற்றை வகைப்படுத்தினர். இதையடுத்து ரூ.94 லட்சத்து 34 ஆயிரம் மதிப்புள்ள 8 ஆயிரத்து 309 கேரட் கொண்ட 1,746 ரத்தின கற்களை பறிமுதல் செய்தனர். இதைத்தொடர்ந்து ரத்தின கற்களை கடத்தி வந்த இலங்கை வாலிபர் நைமுதீனை கைது செய்த அதிகாரிகள், ரத்தின கற்கள் கடத்தல் பின்னணியில் உள்ளது யார்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்