மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க புதிய திட்டத்தை வகுக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்
|தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படை தாக்குதலை தடுக்க மத்திய-மாநில அரசுகள் புதிய திட்டத்தை வகுத்து செயல்பட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
வங்கக் கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த காரைக்கால் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. படகும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது. கடந்த 2 மாதங்களில் நடந்துள்ள ஏழாவது கைது இதுவாகும்.
எனவே கைது செய்யப்பட்ட மீனவர்களை அவர்களின் படகுடன் மீட்க வேண்டும். தமிழக மீனவர்களுக்கு எதிரான இலங்கை கடற்படையின் அத்துமீறல் இனியும் தொடராமல் தடுக்க மத்திய-மாநில அரசுகள் புதிய திட்டம் வகுத்து செயல்படுத்த வேண்டும். ஆன்-லைன் சூதாட்டத்துக்கு கடந்த ஓராண்டில் 28 பேர் உயிரிழந்துள்ளனர். இப்போது ஒரு தற்கொலை முயற்சியும் நடந்துள்ளது.
இவ்வளவுக்கு பிறகும் ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படவில்லை என்றால், மக்களைக் காக்க அரசுக்கு மனம் இல்லையா? என்ற கேள்வி எழுகிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து 90 நாட்களாகி விட்டன. அமைச்சரவையில் இரு முறை விவாதிக்கப்பட்டாகிவிட்டது. இனியும் தயக்கம் ஏன்? எனவே இனியும் தாமதிக்காமல் உடனடியாக ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டத்தை அரசு பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.