மயிலாடுதுறை
தரங்கம்பாடி மீனவர்களை இரும்பு பைப்பால் தாக்கிய இலங்கை கடற்படையினர்
|நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது தரங்கம்பாடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கியதுடன் அவர்களிடம் இருந்து ஜி.பி.எஸ். கருவி, பேட்டரியையும் பறித்து சென்றனர்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது தரங்கம்பாடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் இரும்பு பைப்பால் தாக்கியதுடன் அவர்களிடம் இருந்து ஜி.பி.எஸ். கருவி, பேட்டரியையும் பறித்து சென்றனர்.
தரங்கம்பாடி மீனவர்கள்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த வேல்முருகன்(வயது 42) என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் அவரும், அதே பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(40),அருண்குமார்(26), மாதவன்(36), கார்த்தி(32), முருகன்(54) ஆகிய 6 மீனவர்களும் கடந்த 21-ந் தேதி இரவு தரங்கம்பாடி மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
இவர்கள் நேற்று அதிகாலை நாகை மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 40 நாட்டிக்கல் கடல்மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர்.
இலங்கை கடற்படையினர் தாக்குதல்
அப்போது அங்கு ரோந்து படகில் வந்த இலங்கை கடற்படையினர், தரங்கம்பாடி மீனவர்களை இரும்பு பைப்பால் கொடூரமாக தாக்கினர். மேலும் மீனவர்களின் ஜி.பி.எஸ்.கருவி, தூண்டில், பேட்டரி ஆகியவற்றையும் பறித்துக்கொண்டு சென்றனர்.இலங்பை கடற்படையினர் தாக்கியதில் 6 மீனவர்களுக்கும் உடலில் ரத்தக்கட்டு் ஏற்பட்டதுடன் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து நேற்று மதியம் கரை திரும்பிய மீனவர்களை தரங்கம்பாடி மாவட்ட தலைமை கிராம மீனவ பஞ்சாயத்தார்கள் சிகிச்சைக்காக தரங்கம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பொறையாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து அங்கிருந்து 6 மீனவர்களையும் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக மீன்வளத்துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீசாரிடம் மீனவர்கள் புகார் தெரிவித்தனர். மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை நாகை மீன்வளத்துறை இணை இயக்குனர் இளம்வழுதி சந்தித்து ஆறுதல் கூறினார்.
பரபரப்பு
மேலும் கடலோர பாதுகாப்பு குழும நாகை கூடுதல் சூப்பிரண்டு சங்கர், தரங்கம்பாடி தாசில்தார் புனிதர், மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார், பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி மற்றும் கடலோர போலீசார் மீனவர்களை சந்தித்து விசாரணை நடத்தினர்.
நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டு இருந்த தரங்கம்பாடி மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கிய சம்பவம் மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களையிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கலெக்டர் ஆறுதல்
மயிலாடுதுறை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் மீனவர்களை கலெக்டர் மகாபாரதி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவர் கூறுகையில், தரங்கம்பாடி மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வழக்குபப்பதிவு செய்ய கடலோர காவல் குழும போலீசாருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார். அப்போது மயிலாடுதுறை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா உடனிருந்தனார்.