கன்னியாகுமரி
ஆழ்கடலில் மீன்பிடித்த போது படகு பழுதானதால் பரிதவிப்பு:குமரி மீனவர்களை காப்பாற்றி கரை சேர்த்த இலங்கை மீனவர்கள் பரபரப்பு தகவல்
|ஆழ்கடலில் மீன்பிடித்த போது விசைப்படகு பழுதானதால் குமரி மீனவர்கள் பரிதவித்தனர். அவர்களை இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்டு தீவில் கரை சேர்த்தனர்.
கொல்லங்கோடு:
ஆழ்கடலில் மீன்பிடித்த போது விசைப்படகு பழுதானதால் குமரி மீனவர்கள் பரிதவித்தனர். அவர்களை இலங்கை மீனவர்கள் பத்திரமாக மீட்டு தீவில் கரை சேர்த்தனர்.
குமரி மீனவர்கள்
இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்தவர் வர்க்கீஸ். இவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த நவம்பர் மாதம் 26-ந் தேதி தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் இருந்து 15 பேர் ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்றனர்.
இரவிபுத்தன்துறையை சேர்ந்த வர்க்கீஸ், டைட்டஸ், ஆன்டணி தாசன், குளச்சல் பகுதியை சேர்ந்த விஜூ, தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த சின்னையன் மற்றும் கேரளாவை சேர்ந்த 10 மீனவர்கள் அந்த படகில் இருந்தனர். பின்னர் ஆழ்கடலில் சாலோமோன் என்ற தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.
படகு பழுதானது
இந்தநிலையில் கடந்த மாதம் 4-ந் தேதி விசைப்படகின் கியர்பாக்ஸ் திடீரென பழுதானது. இதனால் படகை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து படகின் உரிமையாளர் வர்க்கீஸ் படகில் பழுதாகி இருந்த பாகத்தை கழற்றி எடுத்துக்கொண்டு அந்த வழியாக தேங்காப்பட்டணம் வந்து கொண்டிருந்த மற்றொரு படகில் ஏறி சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அதைத் தொடர்ந்து படகு அந்த பகுதியில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டிருந்தது. மற்ற மீனவர்கள் படகில் இருந்தனர்.
புயலில் சிக்கியது
இந்தநிலையில் 23-ந் தேதி அந்த பகுதியில் பயங்கர புயல் காற்று வீசியது. இதில் நங்கூரம் உடைந்து படகு காற்றின் வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இதைக் கண்ட மீனவர்கள் விசைப்படகு கவிழ்ந்து விடுமோ? என்ற அச்சத்தில் மரண ஓலமிட்டனர்.
அப்போது அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த இலங்கை மீனவர்கள், பழுதடைந்த விசைப்படகில் இருந்த தமிழக மீனவர்களை தங்களது படகில் ஏற்றி பாதுகாப்பாக அருகில் இருந்த ஒரு தீவில் கொண்டு போய் விட்டுள்ளனர்.
தீவில் பரிதவித்தனர்
பிறகு அங்கும் உணவின்றி மீனவர்கள் பரிதவித்தனர். இவ்வாறாக அங்கு 5 நாட்கள் கழிந்துள்ளது. யாராவது இங்கு வந்து காப்பாற்றி தங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பார்களா? என வழிமேல் விழி வைத்து காத்திருந்தனர்.
அதன்படி 28-ந் தேதி அன்று அந்த வழியாக அமெரிக்கா நாட்டு கப்பல் வந்துள்ளது. உடனே கப்பலை நோக்கி சைகை காட்டியபடி மீனவர்கள் உதவிக்கு வருமாறு அழைத்துள்ளனர். அதை தொடர்ந்து அமெரிக்கா நாட்டினர் 15 மீனவர்களையும் மீட்டு இந்திய சர்வதேச எல்லை பகுதிக்கு அழைத்து வந்தனர்.
பத்திரமாக அழைத்துவந்தனர்
இதனை அறிந்த விழிஞ்ஞம் கடற்படையினர் விரைந்து வந்து 15 மீனவர்களையும் பாதுகாப்பாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.
இதற்கிடையே பழுதான படகின் பாகத்தை சரி செய்து மீண்டும் கடலுக்கு எடுத்து சென்ற உரிமையாளருக்கு மீனவர்கள் கரை திரும்பிய விவரத்தை சேட்டிலைட் போன் மூலம் தெரிவித்து உள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
ஆழ்கடலில் பரிதவித்த தங்களை கரை சேர்க்க உதவிய இலங்கை மீனவர்கள், அமெரிக்க கடற்படையினருக்கு குமரி, கேரள மீனவர்கள் நன்றி தெரிவித்தனர்.