ராமநாதபுரம்
ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை கற்களை வீசி தாக்குதல்
|கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
ராமேசுவரம்,
கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் கற்களை வீசி தாக்கியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்தார்.
கற்களை வீசி தாக்குதல்
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் மீது கடந்த சில நாட்களாகவே இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவதும், கற்களை வீசி தாக்குதல் நடத்தி விரட்டியடிக்கும் சம்பவங்களும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் ராமேசுவரத்தில் இருந்து நேற்று முன்தினம் பாலு என்பவருக்கு சொந்தமான விசைப்படகு ஒன்றில் ராமேசுவரம் சுடுகாட்டம்பட்டி பகுதியை சேர்ந்த செங்கோல் பிராங்க்ளின் (வயது 34), ஜஸ்டின், அஸ்வால்ட் உள்ளிட்ட 4 மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்த மீனவர்கள் நள்ளிரவில் கச்சத்தீவு அருகே உள்ள நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது 2 ரோந்து கப்பலில் அங்கு வந்த இலங்கை கடற்படையினர் திடீரென ராமேசுவரம் மீனவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
மீனவர் படுகாயம்
மேலும் அவர்களை அங்கு மீன்பிடிக்க விடாமல் விரட்டி அடித்தனர். இலங்கை கடற்படையினர் கற்களை வீசியதில் மீனவர் செங்கோல் பிராங்கிளினின் வலது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. மேலும், படகில் இருந்த மற்ற 3 மீனவர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து அந்த 4 மீனவர்களும் அவசர அவசரமாக கரை திரும்பினர்.
இதையடுத்து நேற்று காயம் அடைந்த செங்கோல் பிராங்கிளினை ராமேசுவரம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சைக்கு பின்னர் அவர் வீடு திரும்பினார்.
மீனவர்கள் அச்சம்
இதற்கிடையே மீன்துறை அதிகாரிகளும், மத்திய, மாநில உளவு பிரிவு போலீசாரும் காயமடைந்த மீனவரை சந்தித்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.
கடந்த வாரம் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை துப்பாக்கியால் சுட்டு மீனவர்கள் இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த நிலையில் தற்போது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் மீனவர் ஒருவர் படுகாயம் அடைந்த சம்பவம் ராமேசுவரம் மீனவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.