மயிலாடுதுறை
மர்மமான முறையில் இறந்து கிடந்த புள்ளிமான்
|கொள்ளிடம் அருகே மர்மமான முறையில் புள்ளிமான் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கொள்ளிடம்:
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு இடங்களில் மான்கள் கூட்டம் கூட்டமாக வசித்து வருகின்றன. ஓலையாம்புத்தூர் ஊராட்சியில் செம்பியன்வேலன்குடி பகுதியில் உள்ள காட்டிலும் மான்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. இந்த நிலையில் செம்பியன் வேலன்குடி பொறை வாய்க்கால் அருகே இரண்டரை அடி உயரம், 2½ வயதுடைய பெண் புள்ளிமான் ஒன்று முகத்தில் லேசான காயங்களுடன் இறந்து கிடந்தது. தகவல் அறிந்த சீர்காழி வனச்சரகர் ஜோசப்டேனியல் தலைமையில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி, இறந்து கிடந்த புள்ளி மானின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி கால்நடை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த புள்ளிமான் நாய் துரத்தி முள்வேலியில் மோதி அதிர்ச்சியில் இறந்திருக்கலாம் என கூறப்பட்டாலும், பிரேத பரிசோதனையின் முடிவிலேயே மான் இறப்பிற்கான முழுமையான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். புள்ளிமான் இறந்து கிடந்த தகவல் பரவியதை அடுத்து அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்து மானை சோகத்துடன் பார்த்து சென்றனர்.