கடலூர்
கடலூரில் விளையாட்டு போட்டிகள்
|மேஜர் தயான்சந்தை கவுரவிக்கும் வகையில் கடலூரில் விளையாட்டு போட்டிகள் நாளை மறுநாள் நடக்கிறது.
கடலூர்
சர்வதேச அளவில் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த, இந்திய ஆக்கி முன்னாள் ஒலிம்பியன் மேஜர் தயான்சந்தை கவுரவிக்கும் வகையில், அவரது பிறந்த நாளான ஆகஸ்டு 29-ந் தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாளை மறுநாள்(செவ்வாய்க்கிழமை) கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. அதன்படி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஆக்கி போட்டியும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், 25 வயதுக்குட்பட்டவர்களுக்கு கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டமும், 45 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும் நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் குழு விளையாட்டிற்கு ஒரு குழுவாகவும், தனிநபர் போட்டிக்கு தனியாகவும் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் போட்டி நடைபெறும் அன்று காலை 8 மணிக்கு, மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.
மேற்கண்ட தகவல் கடலூர் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.