< Back
மாநில செய்திகள்
சுற்றுலா பயணிகளுக்கு விளையாட்டு போட்டிகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சுற்றுலா பயணிகளுக்கு விளையாட்டு போட்டிகள்

தினத்தந்தி
|
26 May 2022 10:20 PM IST

கோடைவிழாவையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் கடந்த 24-ந்தேதி கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி பிரையண்ட் பூங்காவில் தொடங்கியது. இந்த மலர் கண்காட்சியில் மலர்களால் உருவான திருவள்ளுவர் சிலை, மலைப்பூண்டு, மயில் உள்ளிட்டவை சுற்றுலா பயணிகளை கவர்ந்தன.

இதனிடையே இந்த மலர் கண்காட்சியை கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 25 ஆயிரம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கண்டுகளித்துள்ளனர். இதன் மூலம் சுமார் ரூ.6½ லட்சம் வருவாய் கிடைத்துள்ளதாக பூங்கா நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விழாவையொட்டி மாவட்ட விளையாட்டு ஆணையத்தின் சார்பில் கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில் நேற்று மெதுவாக சைக்கிள் ஓட்டும் போட்டி, சாக்கு ஓட்டம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்த போட்டிகளில் வெற்றி பெற்ற சுற்றுலா பயணிகளுக்கு பரிசாக ஊக்க தொகைகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இதனை கொடைக்கானல் ஆர்.டி.ஓ. முருகேசன் வழங்கினார்

விழாவில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் விதமாக சிலம்பம், வாள் சண்டை, சுருள் கத்தி சுற்றுதல், பரத நாட்டியம், இசை கச்சேரி என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்த நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து ம‌கிழ்ந்தன‌ர்.

மேலும் செய்திகள்