புதுக்கோட்டை
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்9-ந் தேதி தொடங்குகிறது
|முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது.
விளையாட்டு போட்டிகள்
தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 9-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுப்பிரிவினர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரமும், 2-ம் பரிசாக ரூ.2 ஆயிரமும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரமும் வழங்கப்படும். மாவட்ட அளவிலான தனிநபர் போட்டிகளில் முதலிடம் பெறுபவர்களும், குழு போட்டிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர், வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள அரசு செலவில் அழைத்து செல்லப்படுவர்.
வயது சான்று, ஆதார் கார்டு
ஏற்கனவே போட்டிகளில் கலந்து கொள்ள இணைய தளத்தில் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் கலந்து கொள்ள முடியும். பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் போட்டிகள் நடைபெறும் விவரத்தினை குறுஞ்செய்தி மூலமாக தகவல் தெரிந்து கொள்ளலாம். வயது சான்று, ஆதார் கார்டு, வங்கி புத்தக நகல், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் படிப்பதற்கான சான்றிதழ்கள், அரசு ஊழியர்கள் நிரந்தர பணியாளர்களுக்கான அடையாள அட்டை எடுத்து வர வேண்டும்.
போட்டியாளர்கள் போட்டி நடக்கும் இடத்திற்கு காலை 7 மணிக்கு வர வேண்டும். இணைய தளத்தில் பதிவு செய்யாதவர்கள் நேரடியாக போட்டியில் கலந்து கொள்ள இயலாது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் அதிகாரியை 7401703498 என்ற செல்போன் எண்ணிலோ (அல்லது) 04322 222187 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.