< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்

தினத்தந்தி
|
15 Feb 2023 11:03 PM IST

ராணிப்பேட்டையில் நடைபெறும் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டியை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

விளையாட்டு போட்டி

ராணிப்பேட்டையில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான, மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா நேற்று பெல் ஆர்.சி.மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகள் வருகிற 28-ந் தேதி வரை பெல் ஆர்.சி மைதானம், ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி, ஆற்காடு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வாலாஜா அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஜி.கே. உலகப் பள்ளி ஆகிய இடங்களில் நடக்கிறது.

தடகளம், கையுந்துப்பந்து, கால்பந்து, மேசைப்பந்து, கூடைப்பந்து, இறகுப்பந்து, வளைகோல் பந்து, சிலம்பம், மட்டைப்பந்து, நீச்சல், கபடி மற்றும் செஸ் போன்ற போட்டிகள் நடைபெறுகிறது.

இப்போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், ஊழியர்கள், பொதுப்பிரிவினர்கள் மற்றும் மாற்றுத்திறாளிளுக்கு என தனித்தனியாக நடத்தப்படுகிறது.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கி, போட்டியை தொடங்கி வைத்து மாணவ -மாணவிகள் நல்ல முறையில் விளையாடி வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

விழாவில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் ஞானசேகரன், பெல் மனித வளத்துறை கூடுதல் பொது மேலாளர் செல்வம் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் புவனேஸ்வரி பாண்டியன், உடற் கல்வி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்