விழுப்புரம்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்
|விழுப்புரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் பழனி தொடங்கி வைத்தார்
விழுப்புரம்
விளையாட்டு போட்டிகள்
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடங்கியது. கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்த சிலம்பாட்ட போட்டியை மாவட்ட கலெக்டர் சி.பழனி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் உள்ள விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளின் திறனை மேம்படுத்தும் வகையிலும், கிராமப்புறங்களில் உள்ள விளையாட்டு வீரர்களை வெளிக்கொணரும் விதமாகவும், அரசு அலுவலர்கள் தங்களது விளையாட்டுத்திறனை தொடர்ந்து வெளிப்படுத்திடும் வகையில் முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அறிவுரை
இப்போட்டியானது அடுத்த மாதம்(மார்ச்) 2-ந் தேதி வரை தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெறவுள்ளது. இதில் 12 வயது முதல் 19 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள், 17 வயது முதல் 25 வயது வரை உள்ள கல்லூரி மாணவர்கள், 15 வயது முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினர், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு பிரிவுகளில் கிரிக்கெட், கால்பந்து, மேசைப்பந்து, இறகுப்பந்து, கபடி, கூடைப்பந்து, கையுந்து பந்து, தடகளம், வளைகோல்பந்து, நீச்சல், செஸ் போன்ற பல்வேறு விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளது.
விளையாட்டு ஒன்றே மனதை ஒருநிலைப்படுத்தி உடலை ஆரோக்கியமாக பாதுகாக்கக்கூடிய ஒன்றாக உள்ளது. எனவே பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் தாங்கள் பயிற்சி பெற்று வரும் விளையாட்டுப்போட்டிகளில் சிறந்த முறையில் விளையாட்டுத்திறனை வெளிப்படுத்தி வெற்றி பெற வேண்டும். மாவட்ட அளவில் வெற்றி பெறுபவர்கள் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிகள், உதவிகள் வழங்கப்படும்.
அரசுப்பணியில் முன்னுரிமை
விளையாட்டுத்துறையில் வெற்றி பெறுபவர்களுக்கு அரசுப்பணியிலும் முன்னுரிமை வழங்கப்பட்டு வருகிறது. எனவே விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்கள் விளையாட்டுத்திறனை சிறந்த முறையில் வெளிப்படுத்தி வெற்றி பெற்று விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் லதா, பிரபா, ஹேமலதா, ஹரிதாஸ், ஜான்சன், அருண் உள்பட பலர் உடனிருந்தனர்.