பெரம்பலூர்
பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
|பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தது.
டென்னிஸ் போட்டிகள்
பெரம்பலூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான மாணவ-மாணவிகளுக்கான டென்னிஸ் போட்டிகள் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிவண்ணன் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன், போட்டி ஒருங்கிணைப்பாளரும், களரம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டென்னிஸ் பயிற்சியாளர் பாப்சிகரன், உடற்கல்வி இயக்குனர் பிரேம்நாத் ஆகியோர் போட்டிகளை நடத்தினர். 14 வயது, 17 மற்றும் 19 வயது என 3 பிரிவுகளாக நடந்த இந்த போட்டியில் மாணவர் மற்றும் மாணவிகள் பிரிவுகளில் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி அணிகள் வெற்றி பெற்றன. தந்தை ரோவர் மெட்ரிக் பள்ளி, தந்தை ரோவர் மேல்நிலைப்பள்ளி, ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் பள்ளி அணிகள் 2-வது இடத்தை பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான டென்னிஸ் போட்டிகளில் விளையாடுவதற்கு தகுதி பெற்றுள்ளனர் என்று போட்டி ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
மாவட்ட அளவிலான...
இதேபோல் வேப்பூர் குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நேற்று நடந்தது. இதில் பள்ளி மாணவிகளுக்கு கால்பந்து, இறகு பந்து, வலைகோள் பந்து, கூடைப்பந்து போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் விஸ்வநாதன் தொடங்கி வைத்தார். பள்ளி மாணவிகள் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டவர்கள் என 3 பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில் 200-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் மாவட்ட முன்னாள் உடற்கல்வி ஆய்வாளரும், லெப்பைக்குடிகாடு அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி இயக்குனருமான ராஜேந்திரன், களரம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் நடுவர்களாக இருந்து போட்டிகளை நடத்தினர். இதில் வெற்றி பெற்ற மாணவிகள், பெரம்பலூர் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்.