பெரம்பலூர்
பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
|பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இதில் 800-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா, குடியரசு தின விழாவையொட்டி பெரம்பலூர் குறுவட்ட அளவில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது. நேற்று 14 மற்றும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து, கால்பந்து, பூப்பந்தாட்டம், ஹேண்ட் பால், எறிபந்து, கோ-கோ, இறகுப்பந்து, டேபிள் டென்னிஸ், கபடி உள்ளிட்ட போட்டிகள் பெரம்பலூரில் உள்ள மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்தது. போட்டியினை பெரம்பலூர் மாவட்ட வாலிபால் அசோசியேஷன் தலைவர் பரமேஷ்குமார், பொருளாளர் செல்லப்பிள்ளை, துணை செயலாளர் பாஸ்கர், நகர்மன்ற துணைத் தலைவர் ஹரிபாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் பெரம்பலூர், வேப்பந்தட்டை ஒன்றியங்களை சேர்ந்த பள்ளிகளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் முதலிடம் பிடித்த அணிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. மேலும் முதலிடம் பிடித்த அணிகள் அடுத்த மாதம் (செப்டம்பர்) நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பெரம்பலூர் குறுவட்ட அளவிலான 14 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மேற்கண்ட விளையாட்டு போட்டிகள் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ளது.