< Back
மாநில செய்திகள்
மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள்

தினத்தந்தி
|
1 Nov 2022 12:36 AM IST

மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.

புதிய விளையாட்டு போட்டிகள்

பெரம்பலூர் மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பாக பாரதியார் பிறந்த நாள் விழா மற்றும் குடியரசு தின விழாவையொட்டி 14, 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பள்ளி மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான புதிய விளையாட்டு போட்டிகள் நேற்று நடந்தன. பெரம்பலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். விளையாட்டு அரங்கில் நடந்த போட்டியை மாவட்ட பள்ளி உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார்.

இதில் புதிய விளையாட்டுகளாக மாணவிகளுக்கு லாங் டென்னிஸ், வளையப்பந்து, கேரம் ஆகிய போட்டிகள் ஒற்றையர், இரட்டையர் பிரிவிலும் மற்றும் குத்துச்சண்டை போட்டியும் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். வளையப்பந்து போட்டியில் அனைத்து பிரிவுகளிலும் கீழப்பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளி அணி வீராங்கனைகள் முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

முதலிடம்

கேரம் இரட்டையர் பிரிவில் 17, 19 வயதுகளுக்கு உட்பட்ட பிரிவுகளில் வேப்பந்தட்டை அரசு மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது. கேரம் ஒற்றையர் பிரிவில் 17 வயதுக்கு உட்பட்டோரில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி அணி முதலிடம் பிடித்தது. குத்துச்சண்டை போட்டியில் 14, 17 வயதுகளுக்கு உட்பட்ட எடை பிரிவுகளில் மேலமாத்தூர் அரசு உயர்நிலைப்பள்ளியும், பரவாய் அரசு உயர்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தன. அந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட எடை பிரிவுகளில் பாடாலூர் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியும், குன்னம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியும் முதலிடம் பிடித்தன.

பதக்கம்

வெற்றி பெற்ற அணியினருக்கும், முதலிடம் பிடித்தவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகளும், வீராங்கனைகளும் மாநில அளவிலான போட்டிகளில் விளையாட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை(புதன்கிழமை) பள்ளி மாணவிகளுக்கான சிலம்பம், ஜூடோ, சாலையோர மிதிவண்டி ஆகிய விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்