ராமநாதபுரம்
விளையாட்டு போட்டிகள்
|மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன.
பனைக்குளம்,
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு ராமநாதபுரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் தலைமை தாங்கினார். பயிற்சி கலெக்டர் நாராயண சர்மா, ஊராட்சிகள் உதவி இயக்குனர் பரமசிவம், வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலர் சண்முகவள்ளி, மண்டபம் யூனியன் ஆணையாளர் சண்முகநாதன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாண்டி உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர். இதில் மகளிர்களுக்கான கோலப்போட்டி மற்றும் அதிர்ஷ்டம் அழைக்கிறது, மியூசிக், ஷிப்பிங் கயிறு, சிறுவர் சிறுமிகளுக்கான 100 500, 200 மீட்டர் ஓட்டப்பந்தயம் மாணவர்களுக்கான நீர் நிரப்புதல், பள்ளிக்கு ஆயத்தமாகும் நிகழ்ச்சி மற்றும் தவளை ஓட்டம் விளையாட்டு, சாக்கு ஓட்டம், யோகா, கட்டுரைப் போட்டி, பேச்சுப்போட்டி, நடைபெற்றன.
இந்த விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கூடுதல் கலெக்டர் பிரவீன் குமார் பரிசு வழங்கி பாராட்டினார். முன்னதாக அனைவரையும் வேதாளை ஊராட்சி மன்ற தலைவர் சையது அல்லா பிச்சை வரவேற்றார். வேதாளை ஊராட்சிக்கு உட்பட்ட அனைத்து சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து சுகாதார சமத்துவ பொங்கல் கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக வேதாளை மண்டபம் ஒன்றிய கவுன்சிலர் தௌபிக் அலி கலந்துகொண்டு அனைவர்களுக்கும் பொங்கல் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் ஊராட்சி மன்றத்தின் சார்பில் துணைத்தலைவர் சந்திரகலா, உறுப்பினர்கள் முனியசாமி, ராமசாமி, லட்சுமி, ஜிம்மத் நசீமா, ருவைதாபேகம், நூர்ஜஹான், ஜெயபிரகாஷ், கணேசன், சையது ராபியா, நம்புராணி, சீனி அப்துல் ரகுமான் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் ராஜேந்திரன் மற்றும் ஊராட்சி பணியாளர்கள் செய்திருந்தனர்.