< Back
மாநில செய்திகள்
முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்:வீரர், வீராங்கனைகள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்
நாமக்கல்
மாநில செய்திகள்

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள்:வீரர், வீராங்கனைகள் இணையதளத்தில் பதிவு செய்யலாம்

தினத்தந்தி
|
6 Jan 2023 12:15 AM IST

முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் வீரர், வீராங்கனைகள் இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என கலெக்டர் ஸ்ரேயாசிங் அறிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விளையாட்டு போட்டிகள்

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என 5 பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கும் வகையில் நடத்தப்பட உள்ளன.

மாவட்ட அளவில் 42 வகையான போட்டிகளும், மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என 50 வகையான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் நாமக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடத்தப்பட உள்ளன. இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விரும்பும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளமான www.sdat.tn.gov.in முகவரியில் வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களையும் பதிவு செய்திடவேண்டும்.

பொதுப்பிரிவில் 15 வயது முதல் 35 வயது வரை உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு கபடி, சிலம்பம், தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து போட்டிகளும், 12 முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், கைப்பந்து, மேஜைப்பந்து போன்ற போட்டிகளும், மண்டல அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டென்னிஸ், பளு தூக்குதல், கடற்கரை கைப்பந்து போன்ற போட்டிகளும், கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைப்பந்து, இறகுப்பந்து, கால்பந்து, ஆக்கி, நீச்சல், கைப்பந்து, மேஜைப்பந்து போன்ற போட்டிகளும் மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கைப்பந்து ஆகிய போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

மாநில போட்டிக்கு தேர்வு

இதேபோல் மாற்றுத்திறனாளிகளுக்கு ஓட்டப்பந்தயம், இறகுப்பந்து உள்ளிட்ட போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு மாவட்ட அளவில் கபடி, தடகளம், இறகுப்பந்து, கைப்பந்து, செஸ் போன்ற போட்டிகளும், மண்டல அளவில் பளு தூக்குதல், பீச் வாலிபால் மற்றும் டென்னிஸ் போன்ற போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள். பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, மாவட்ட அணிகளின் சார்பாக மாநில போட்டிகளில் கலந்து கொள்வார்கள். தனி நபர் போட்டிகளில் தர வரிசையின்படி சிறந்த வீரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள்.

பரிசு விவரம்

மாவட்ட அளவில் முதல் இடம் பிடிக்கும் தனிநபர் மற்றும் ஒற்றையர், இரட்டையருக்கு ரூ.3 ஆயிரம், குழு போட்டிகளில் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.3 ஆயிரம், 2-ம் இடம் பிடிக்கும் நபர்களுக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாம் இடம் பிடிக்கும் நபர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும்இளைஞர் நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்