கரூர்
மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடங்கியது
|கரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடங்கி உள்ளது.
விளையாட்டு போட்டி தொடக்கம்
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று 2022-23-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்தார். மாநகராட்சி மேயர் கவிதா முன்னிலை வகித்தார். தொடர்ந்து கலெக்டர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல்-அமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், கரூர் சார்பாக, பொதுப்பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் ஆகிய 5 பிரிவுகளில் ஆண், பெண் இரு பாலரும் பங்கேற்கும் வகையில் மாவட்ட அளவில் 43 வகையான போட்டிகள் நடைபெறுகின்றன. மண்டல அளவில் 8 வகையான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
பரிசுகள்
மாவட்ட அளவில் தனிநபர் மற்றும் குழுப் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.ஆயிரம் வழங்கப்படும்.
மாநில அளவிலான தனிநபர் போட்டிகளில் வெற்றி பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2-வது பரிசாக ரூ.75 ஆயிரம், 3-வது பரிசாக ரூ. 50 ஆயிரம் வழங்கப்படும். கரூர் மாவட்டத்தில் விளையாட்டுகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெறும் தனி நபர் மற்றும் குழு விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுத் தொகை மட்டும் ரூ. 42 லட்சத்து 8 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.
16,451 பேர் பதிவு
கரூர் மாவட்டத்தில் நேற்று முதல் முதல்-அமைச்சர் கோப்பைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டு உள்ளன. கரூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெறுவதற்கு இணையதளம் வாயிலாக தனிநபர் விளையாட்டு பிரிவில் 6451 பேர், குழு விளையாட்டுப்போட்டிகளில் 10 ஆயிரம் பேர் என மொத்தம் 16 ஆயிரத்து 451 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளார்கள்
பள்ளி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நேற்று வளைக்கோல்பந்து, கபடி, கால்பந்து போட்டிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. வருகிற 15-ந்தேதி வரை சிலம்பம், தடகளம் என பல்வேறு போட்டிகள் நடக்கின்றன. மேலும் அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுப்பிரிவினருக்கும் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.