< Back
மாநில செய்திகள்
ஒண்டர்லோன் செயலிக்கு எதிராக விரைவான விசாரணை: சைபர் கிரைம் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

'ஒண்டர்லோன்' செயலிக்கு எதிராக விரைவான விசாரணை: சைபர் கிரைம் போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
23 Feb 2023 12:29 AM IST

கடன் வாங்கித்தருவதாக நாடு முழுவதும் மோசடி செய்யும் ‘ஒண்டர்லோன்' என்ற செயலி குறித்த விவரங்களை கூகுள் நிறுவனத்திடம் பெற்று விரைவாக புலன் விசாரணை செய்யும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

ரிசர்வ் வங்கியிடம் முறையாக அனுமதியை பெற்று வாகன கடன் வழங்கும் நிதி நிறுவனத்தை நடத்திவருகிறோம். எங்கள் நிறுவனத்தின் பெயர், முகவரி உள்ளிட்டவற்றை பயன்படுத்தி 'ஒண்டர்லோன்' என்ற செயலி மூலம் ஒரு கும்பல் அப்பாவி பொதுமக்களிடம் இருந்து கடன் வாங்கித் தருவதாக பண மோசடி செய்துவருகிறது. இந்த மோசடி குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் எங்கள் நிதி நிறுவனத்துக்கு இமெயில் வந்தது.

நாங்கள் உடனடியாக திண்டுக்கல் போலீசில் புகார் செய்தோம். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாடு முழுவதும் மோசடி

இந்நிலையில் இந்த மோசடி கும்பல் நாடு முழுவதும் பலரிடம் பணத்தை பறித்து வருகின்றனர். இந்தக் கும்பல் செய்யும் மோசடிக்கு, எங்கள் நிறுவனத்துக்கு எதிராக டெல்லியைச் சேர்ந்த வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். ஆந்திரா மாநிலம் விஜயவாடா போலீசார் இந்த மோசடி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு வரும்படி எங்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர்.

ஆனால், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை எதுவும் நாங்கள் செய்யவில்லை. ஒண்டர்லோன் என்ற செயலிக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.

ஏதோ ஒரு மர்மக்கும்பல் எங்கள் நிறுவனத்தின் பெயரில் இந்த மோசடியை செய்து வருகிறது. இந்த மோசடி குறித்து ரிசர்வ் வங்கிக்கும், கூகுள் நிறுவனத்துக்கும் ஏற்கனவே புகார் அனுப்பியுள்ளோம். இந்து புகாரின் அடிப்படையில் சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

விவரங்கள் தர தயார்

இந்த வழக்கு நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான வக்கீல் சி.மோகன், 'மனுதாரர் அனுப்பிய புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு டி.ஜி.பி.க்கு ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. அதன்படி சென்னை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்' என்று கூறினார்.

கூகுள் நிறுவனம் சார்பில் ஆஜரான வக்கீல் பாலசுப்பிரமணியன், 'ஒண்டர்லோன் என்ற செயலியின் யூஆர்எல் முகவரி விவரத்தை குறிப்பிட்ட இ-மெயில் மூலம் அனுப்பிவைத்தால், அந்த செயலியை யார் தொடங்கியுள்ளனர் என்பது உள்ளிட்ட விவரங்களை தர கூகுள் நிறுவனம் தயாராக உள்ளது' என்றார்.

போலீஸ் கடிதம்

சென்னை மற்றும் திண்டுக்கல் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர்கள் சங்கர், மீனா ஆகியோர் ஆஜராகி, இந்த மோசடி குறித்து புலன் விசாரணை நடத்தி வருவதாக கூறி, புலன் விசாரணையின் நிலை அறிக்கையை தனித்தனியாக தாக்கல் செய்தனர். அதில், பிளேஸ்டோரில் இருந்து ஒண்டர்லோன் செயலியை அகற்ற கூகுள் நிறுவனத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக கூறியிருந்தனர்.

அதையடுத்து நீதிபதி, கூகுள் நிறுவன வக்கீல் கூறும் இமெயிலுக்கு, இந்த மோசடி செயலி குறித்த விவரங்களை போலீசார் அனுப்ப வேண்டும். அவர்கள் தரும் விவரங்களை கொண்டு புலன் விசாரணையை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 12 வாரத்துக்கு தள்ளி வைத்தார்.

மேலும் செய்திகள்