தர்மபுரி
தர்மபுரியில்மாணவ, மாணவிகளுக்கான விரைவு சைக்கிள் போட்டி
|தர்மபுரியில் மாணவ, மாணவிகளுக்கான விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் அண்ணா பிறந்தநாளையொட்டி தர்மபுரியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் வீரர், வீராங்கனைகளுக்கான விரைவு சைக்கிள் போட்டி நடைபெற்றது. பென்னாகரம் ரோடு ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி பஸ் நிறுத்தத்தில் இருந்து தொடங்கிய போட்டியை உதவி கலெக்டர் கீதா ராணி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 13 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 15 கி.மீட்டர் தொலைவிற்கும், மாணவிகளுக்கு 10 கி.மீட்டர் தொலைவிற்கும், 15 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டர் தொலைவிற்கும், மாணவிகளுக்கு 15 கி.மீட்டர் தொலைவிற்கும், 17 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு 20 கி.மீட்டர் தொலைவிற்கும், மாணவிகளுக்கு 15 கி.மீட்டர் தொலைவிற்கும் நடத்தப்பட்டது.
மாவட்ட அளவில் நடைபெற்ற இந்த போட்டிகளில் முதல் 3 இடங்களை பிடித்து வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை உதவி கலெக்டர் வழங்கினார். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி, முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உள்பட தொடர்புடைய அலுவலர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், விளையாட்டு வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.