< Back
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
நாமக்கல்
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
8 July 2023 6:45 PM GMT

நாமக்கல் மாவட்ட அளவில் வருகிற 13-ந் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட இருப்பதாக கலெக்டர் உமா தெரிவித்து உள்ளார்.

பேச்சுப்போட்டி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 13-ந் தேதி அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப்போட்டி நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி பிற்பகல் 1.30 மணி முதல் தொடங்கி நடத்தப்படும்.

பரிசு விவரம்

இப்போட்டியில் பங்கு பெற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்படும் பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களில் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசுத்தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்க உள்ளார்கள். இதேபோல் கல்லூரி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு கலைத்தாயின் தவப்புதல்வன், முத்தமிழறிஞர், சங்கத்தமிழ், செம்மொழி, பிறப்பொக்கும் எல்லா உயிருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம் மற்றும் நெஞ்சுக்கு நீதி என்கிற 10 தலைப்புகளில் போட்டி நடைபெற உள்ளது. இதேபோல் கல்லூரி மாணவர்கள் என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச் சூரியனே, பூம்புகார், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகர் கலைஞர், சமூக நீதி காவலர் கலைஞர் போன்ற தலைப்புகளிள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தலாம்.

கல்லூரி முதல்வர் அனுமதி

கல்லூரி மாணவ, மாணவிகள் அந்தந்த கல்லூரி முதல்வரின் அனுமதியுடன், கல்லூரி கல்வி இணை இயக்குனர் வழியாகவும், பள்ளி மாணவ, மாணவிகள் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரின் அனுமதியுடன் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வழியாகவும் இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக கூடுதல் கட்டிடத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்