நீலகிரி
நீலகிரியில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்
|அண்ணா, பெரியார் பிறந்தநாளையொட்டி நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் வருகிற 30-ந் தேதி தொடங்குகிறது.
நீலகிரி மாவட்ட கலெக்டர் அருணா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கை அறிவிப்புபடி 2023-2024-ம் ஆண்டில் நீலகிரி மாவட்டத்தில் அண்ணா மற்றும் பெரியார் ஆகியோர்களின் பிறந்தநாளையொட்டி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டிகள் தனித்தனியே ஊட்டி அரசு கலைக் கல்லூரியில் நடக்கிறது. இந்த போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெறும் பள்ளி, கல்லுாரி மாணவ மாணவிகளுக்கு ஒவ்வொரு போட்டிக்கும் தனித்தனியே முதல் பரிசாக ரூ.5000, 2-ம் பரிசாக ரூ.3000, 3-ம் பரிசாக ரூ.2000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. அத்துடன் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுள் சிறப்புடன் திறமையை வெளிப்படுத்தும் அரசுப் பள்ளி மாணவர்கள் 2 பேரை தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பரிசுத்தொகையாக ரூ.2000 மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கபட உள்ளன.
இதன்படி அண்ணா பிறந்தநாள் பேச்சுப் போட்டி வரும 30-ந் தேதி நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகளாக, தாய் மண்ணிற்குப் பெயர் சூட்டிய தனயன், மாணவர்க்கு அண்ணா, அண்ணாவின் மேடைத்தமிழ், அண்ணா வழியில் அயராது உழைப்போம் ஆகியவையும், கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகளாக, பேரறிஞர் அண்ணாவும் தமிழக மறுமலர்ச்சியும், பேரறிஞர் அண்ணாவின் சமுதாயச் சிந்தனைகள், அண்ணாவின் தமிழ் வளம், அண்ணாவின் அடிச்சுவட்டில், தம்பி மக்களிடம் செல் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளது.
31-ந் தேதி பெரியார் பிறந்தநாள் பேச்சுப் போட்டிக்கள் நடக்கிறது. பள்ளி மாணவர்களுக்கான தலைப்புகளாக, தொண்டு செய்து பழுத்த பழம், தந்தை பெரியாரும் தமிழ்ச் சமுதாயமும், தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள், தந்தை பெரியார் காண விரும்பிய உலக சமுதாயம், தந்தை பெரியாரும் பெண் விடுதலையும் ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவர்களுக்கான தலைப்புகளாக, தந்தை பெரியாரும் பெண் விடுதலையும், தந்தை பெரியாரும் மூடநம்பிக்கை ஒழிப்பும், பெண் ஏன் அடிமையானாள், இனிவரும் உலகம், சமுதாய விஞ்ஞானி பெரியார், உலகச் சிந்தனையாளர்களும் பெரியாரும் ஆகியவையும் ஒதுக்கப்பட்டுள்ளது. போட்டிகளுக்கான தலைப்புகளில் ஏதேனும் ஒன்றை போட்டி நடைபெறும் நேரத்தில் மாணவர்கள் குலுக்கல் சீட்டு முறையில் தேர்வு செய்து அந்தத் தலைப்பில் மட்டுமே பேசுவதற்கு அனுமதிக்கப்படுவர்.மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் கலந்துகொள்ள விருப்பமுள்ள மாணவர்கள் உரிய படிவத்தைப் பூர்த்தி செய்து பள்ளித் தலைமையாசிரியர், கல்லூரி முதல்வர் பரிந்துரையுடன் கையெழுத்து பெற்று வரும் 27-ந் தேதிக்குள் ootytamilvalarchi@gmail.com என்ற மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இந்ந பேச்சுப்போட்டிகளில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.