< Back
மாநில செய்திகள்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள்

தினத்தந்தி
|
7 Nov 2022 1:36 PM IST

தமிழ் வளர்ச்சி துறையின் மூலம் காஞ்சீபுரம் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டிகள் வருகிற 14-ந்தேதி நடைபெறவுள்ளது என்று மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்‌.

பேச்சுப்போட்டிகள்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் ஜவகர்லால் நேரு பிறந்தநாளையொட்டி வருகிற 14-ந்தேதி (திங்கட்கிழமை) அன்று பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கென தனித்தனியாக பேச்சுப்போட்டிகள் காஞ்சீபுரம், பச்சையப்பன் மகளிர் கல்லூரியில் நடைபெற உள்ளது.

இந்த போட்டியானது பள்ளி மாணவர்களுக்கு முற்பகல் 9.30 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகல் 2 மணிக்கும் தொடங்கப்பட உள்ளது.

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் கல்லூரிக்கு 2 பேர் வீதம் அந்தந்த கல்லூரிகளின் முதல்வரே தெரிவுசெய்தும், பள்ளி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் பள்ளிகளின் தலைமையாசிரியர்களே ஒரு பள்ளிக்கு ஒருவர் வீதம் தெரிவு செய்து போட்டிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு 1. குழந்தைகள் தின விழா, 2. ரோசாவின் ராசா, 3. ஜவகர்லால் நேருவின் தியாகங்கள், 4. நூல்களை போற்றிய நேரு, 5.அண்ணல் காந்தியின் வழியில் நேரு, 6.இளைஞரின் வழிகாட்டி நேரு ஆகிய தலைப்புகளிலும், கல்லூரி மாணவ- மாணவிகளுக்கு, 1.இந்திய விடுதலைப் போரில் நேருவின் பங்களிப்பு, 2. நேரு கட்டமைத்த இந்தியா, 3. காந்தியும் நேருவும், 4. நேருவின் பஞ்சசீல கொள்கை, 5.உலக அமைதிக்கு நேருவின் தொண்டு, 6. அமைதிப்புறா நேரு போன்ற தலைப்புகளிலும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

பரிசுத்தொகை

இந்த போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெறும் கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பட உள்ளது.

இதேபோன்று பள்ளி மாணவர்களுக்கும் மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5 ஆயிரம், 2-வது பரிசு ரூ.3 ஆயிரம், 3-வது பரிசு ரூ.2 ஆயிரம் என்ற வகையில் வழங்கப்பெற உள்ளன.

மேலும் பள்ளி மாணவர்களுக்கென நடத்தப்பெறும் பேச்சுப்போட்டியில் கலந்து கொண்ட மாணவர்களுள் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரைத் தனியாகத் தெரிவு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசு தொகை ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்பெறவும் உள்ளன.

இதில் கல்லூரி மற்றும் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகள் கலந்து கொண்டு பயன் பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்