பெரம்பலூர்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள்
|பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சு போட்டிகள் நடந்தது.
அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக பேச்சு போட்டிகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. போட்டிகளுக்கு மாவட்ட தமிழ் வளர்ச்சி துறையின் உதவி இயக்குனர் சித்ரா தலைமை தாங்கினார். காலையில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கும், மதியம் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கும் பேச்சு போட்டி நடத்தப்பட்டது. இதில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் வந்து போட்டியில் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்படவுள்ளது. இதைத்தவிர பேச்சு போட்டியில் அரசு பள்ளி மாணவ-மாணவிகளில் தனியாக தேர்வு செய்யப்பட்ட 2 பேருக்கு சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படவுள்ளது.
இதேபோல் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறை சார்பில் மாவட்ட அளவிலான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக பேச்சு போட்டிகள் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெறவுள்ளது.