< Back
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள்

தினத்தந்தி
|
19 July 2023 12:19 AM IST

பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது.

பேச்சுப்போட்டிகள்

தமிழ்நாடு அரசு உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளிடையே தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 28-ந் தேதியும், கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 31-ந்தேதியும் பேச்சுப் போட்டிகள் தனித்தனியாக பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடத்தப்பட உள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு காலை 9 மணிக்கும், கல்லூரி மாணவர்களுக்கு மதியம் 2 மணிக்கும் பேச்சுப் போட்டிகள் நடத்தப்படுகிறது.

இப்போட்டிகளில் பெரம்பலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். பேச்சுப் போட்டியில் கலந்து கொள்ளும் கல்லூரி மாணவர்களை கல்லூரி இணை இயக்குனர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பி ஒவ்வொரு கல்லூரியிலும் அந்தந்த கல்லூரி முதல்வர் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பிடவும், பேச்சுப் போட்டியில் பங்கேற்கும் பள்ளி மாணவர்களை முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாக சுற்றறிக்கை அனுப்பி அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் தேர்வு செய்து பரிந்துரை படிவத்துடன் தொடர்புடைய போட்டிக்கு அனுப்பிடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அனுமதி பெற்று பங்கேற்கலாம்

இதேபோல் அரியலூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி வருகிற 25-ந் தேதியும், கருணாநிதி பிறந்த நாளையொட்டி வருகிற 26-ந் தேதியும் அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியே பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியானது காலை 9 மணிக்கு தொடங்கப்படும்.

அரியலூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவிகள் கல்லூரிக் கல்வி இயக்குனர் வாயிலாக அந்தந்த கல்லூரி முதல்வரிடமும், முதன்மை கல்வி அலுவலர் வாயிலாக அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரிடமும் அனுமதி பெற்று இப்பேச்சுப்போட்டியில் பங்கேற்கலாம்.

பரிசு

மாவட்டங்களில் நடைபெறும் இந்த போட்டிகளில் கல்லூரி அளவிலான பேச்சுப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வகையிலும், பள்ளி அளவிலான பேச்சுப்போட்டியில் பங்கேற்கும் மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வகையிலும் பரிசுகள் வழங்கப்படும். மேலும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து அவர்களுக்கு சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் வீதம் வழங்கப்படும்.

இந்த தகவலை மாவட்ட கலெக்டர்கள் கற்பகம், ஆனி மேரி ஸ்வர்ணா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்