< Back
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
விருதுநகர்
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
23 Oct 2023 1:18 AM IST

காந்தி ஜெயந்தியையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது.

தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் வருகிற நவம்பர் 3-ந் தேதி அன்று காந்தி ஜெயந்தியையொட்டி பேச்சுப்போட்டி விருதுநகர் ஹாஜிபி செய்யது முகமது மேல்நிலைப்பள்ளியிலும், ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி நவம்பர் 16-ந் தேதி விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடத்தப்பட உள்ளது.

பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகலிலும் இந்த போட்டிகள் நடைபெறும். அரசு தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு, தனியார், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகள், என்ஜினீயரிங் மருத்துவக் கல்லூரிகள், பல் தொழில்நுட்பக்கல்லூரி மாணவர்கள் இந்த போட்டிகளில் பங்கேற்கலாம்.

போட்டிகள் குறித்த விவரங்கள் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமும், கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் மூலமும் தெரிவிக்கப்படும். காந்தி ஜெயந்தி பேச்சு போட்டி பள்ளி மாணவர்களுக்கு காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு, தென் ஆப்பிரிக்காவில் காந்தியடிகள், வட்டமேசை மாநாட்டில் காந்தியடிகள், கல்லூரி மாணவர்களுக்கு காந்தியடிகள் நடத்திய தண்டி யாத்திரை, வெள்ளையனே வெளியேறு இயக்கம், சத்திய சோதனை, மதுரையில் காந்தி ஆகிய தலைப்புகளில் நடைபெறும்.

ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சு போட்டி பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர இந்தியாவில் முதல் பிரதமர், ஆசிய ஜோதி மனிதருள் மாணிக்கம், கல்லூரி மாணவர்களுக்கு சுதந்திர போராட்டத்தில் நேரு, பஞ்சசீலக் கொள்கை, நேருவின் வெளியுறவு கொள்கை ஆகிய தலைப்புகளில் நடைபெறுகிறது.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ. 5ஆயிரம், 2-வது பரிசு ரூ. 3ஆயிரம், 3-வது பரிசு ரூ.2ஆயிரம் என்ற வீதத்திலும் வழங்கப்படுகிறது.

பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சு போட்டியில் மட்டும் தங்கள் பேச்சுத்திறனை சிறப்பாக வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருக்கும் சிறப்பு பரிசு ரூ. 2ஆயிரம் என்ற வீதத்திலும் வழங்கப்படும். மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

மேலும் செய்திகள்