< Back
மாநில செய்திகள்
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி
விருதுநகர்
மாநில செய்திகள்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி

தினத்தந்தி
|
4 Oct 2023 1:27 AM IST

பெரியாரின் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளதாக கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் பிறந்தநாள் பேச்சு போட்டிகள் வருகிற 11-ந் தேதி அன்று தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்கு பிற்பகலிலும் விருதுநகர் தங்கம்மாள் பெரியசாமி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

அரசு, தனியார், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு, தனியார், அரசு உதவி பெறும் கலை கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், மருத்துவக்கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்கலாம். போட்டிகள் குறித்த விவரங்கள் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர் மூலமாகவும், கல்லூரிகளுக்கு கல்லூரி கல்வி இணை இயக்குனர் மூலமாகவும் அனுப்பப்படும்.தந்தை பெரியார் பிறந்த நாள் பேச்சு போட்டி தலைப்புகள் பள்ளி மாணவர்களுக்கு வெண் தாடி வேந்தர், வைக்கம் வீரர், பகுத்தறிவு பகலவன், பெரியாரின் சமூக சீர்திருத்தங்கள், கல்லூரி மாணவர்களுக்கு பெரியாரும், பெண் விடுதலையும், சுயமரியாதை இயக்கம், தெற்காசியாவின் சாக்ரடீஸ், தன்மான பேரொளி, தந்தை பெரியாரின் சமூக நீதி சிந்தனைகள் ஆகிய தலைப்புகளில் தந்தை பெரியாரின் பிறந்த நாள், பேச்சு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ. 5 ஆயிரம், 2-வது பரிசு ரூ. 3 ஆயிரம், 3-வது பரிசு ரூ. 2 ஆயிரம் என்ற வீதத்தில் வழங்கப்படுகிறது. பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படும் பேச்சு போட்டியில் மட்டும் தங்கள் பேச்சுத்திறனை சிறப்பாக வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள் 2 பேர் தனியாக தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசாக ரூ.2 ஆயிரம் என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளது.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ஜெயசீலன் கூறினார்.

மேலும் செய்திகள்