தேனி
தேனி கோவில்களில் சிறப்பு வழிபாடு
|தேனி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு பூஜை
போடி சீனிவாச பெருமாள் கோவிலில் நேற்று கிருஷ்ண ஜெயந்தியையொட்டி காலை 5 மணிக்கு சந்தான கோபால கிருஷ்ண சாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து மூலவர் சீனிவாச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து குருவாயூர் கிருஷ்ணர் அலங்காரத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ண ஜெயந்தியையொட்டி பெரியகுளம் தென்கரை பகுதியில் உள்ள கோபால கிருஷ்ணர் கோவிலில் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
பெரியகுளம் வடகரை
இதேபோல் தென்கரையில் உள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்-ராதைக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதனை முன்னிட்டு சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இந்த கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு வருகிற 16-ந்தேதி வரை நடைபெறுகிறது.
பெரியகுளம் வடகரையில் கவுரி துளசி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி மாலை 3 மணிக்கு கரகம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.