< Back
மாநில செய்திகள்
ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு
சிவகங்கை
மாநில செய்திகள்

ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
2 Aug 2022 11:33 PM IST

ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் மகா அபிஷேகம் நடக்கிறது.

சிங்கம்புணரி,

ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் மகா அபிஷேகம் நடக்கிறது.

சித்தர் முத்துவடுகநாதர் கோவில்

ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். இதேபோல் அன்றைய தினம் பொதுமக்கள் புதிய நகை, மோட்டார் சைக்கிள், கார் உள்ளிட்ட பொருட்களும் வாங்குவது வழக்கம். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக இந்த விழா பெரிய அளவில் கொண்டாடப்படவில்லை.

இந்தாண்டு கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்ததால் ஆடிப்பெருக்கு இன்று(புதன்கிழமை) சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று சிங்கம்புணரி சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் காலை 9 மணிக்கு முத்துவடுகநாதருக்கு பால், பன்னீர், சந்தனம், மஞ்சள் உள்ளிட்ட 36 வகையான பொருட்களால் அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற உள்ளது.

50 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

இதை தொடர்ந்து கோவில் முன்பு உள்ள அன்னதான மண்டபத்தில் மலைபோல் குவிக்கப்படும் அன்னத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இதில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அன்னதானத்தில் அமர்ந்து சாப்பிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை 36-வது ஆண்டு வணிகர் நல சங்கத்தினர் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று மாலை 6 மணிக்கு முத்துவடுகநாதர் கோவிலில் அன்னதான நிகழ்ச்சிக்காக அடுப்பு மூட்டும் வைபோகம் நிகழ்ச்சி தொடங்கியது.

சுமங்கலி பூஜை

இதேபோல் சிவகங்கை காசிவிஸ்வநாதர் கோவில், காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோவில், கொப்புடையநாயகி அம்மன் கோவில், கணேசபுரம் மாரியம்மன் கோவில், மடப்புரம் அடைக்கலம் காத்த அய்யனார், பத்திர காளியம்மன் கோவில், தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோவில், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் இன்று சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

இதேபோல் காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோவிலில் இன்று ஆடிபெருக்கு தினத்தை முன்னிட்டு கோவில் தெப்பக்குளக்கரையில் பெண்கள் புதிய மஞ்சள் கயிறு மாற்றும் நிகழ்ச்சியும், கணேசபுரம் மாரியம்மன் கோவிலில் சுமங்கலி பூஜையும் நடைபெற உள்ளது. மேலும் சிங்கம்புணரி, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆடி பெருக்கை முன்னிட்டு விவசாயிகள் தங்களது விளை நிலங்களில் உழவார பணியையும் தொடங்குகின்றனர்.

ஆடிப்பெருக்கு தினத்தையொட்டி மதுரையில் இருந்து சிங்கம்புணரி சித்தர்முத்துவடுகநாதர் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் விடப்பட்டு உள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்