பெரம்பலூர்
தைப்பூசத்தையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு
|தைப்பூசத்தையொட்டி கோவில்களில் நடந்த சிறப்பு வழிபாட்டில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பாலமுருகன் கோவில்
தைப்பூச திருவிழாவையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பெரம்பலூர்-எளம்பலூர் சாலையில் உள்ள ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் தைப்பூசத்தையொட்டி காலையில் பாலமுருகனுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம், இளநீர் உள்ளிட்டவையால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட பாலமுருகனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும் கோவில் மறு கும்பாபிஷேகத்திற்காக திருப்பணி நடைபெற்று வருவதால் தைப்பூசத்தன்று மாலையில் நடைபெறும் தேரோட்டம் இந்த ஆண்டு நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் பெரம்பலூர் மரகதவல்லி தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழாவினை முன்னிட்டு நேற்று காலையில் மூலவர், தாயார் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கும் மகா அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மதியம் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இரவில் உற்சவ பெருமாள் யானை வாகனத்தில் வீதி உலா வந்தார்.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
பவுர்ணமி மற்றும் தைப்பூசத்தையொட்டி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மதுரகாளியம்மன் கோவில் நடை நேற்று திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மனுக்கு மதியம் அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். துறைமங்கலத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள முருகனுக்கு மாலையில் அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் இரவில் உற்சவ முருகன் வீதி உலா வந்தார். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
2-வது நாளாக தேரோட்டம்
தைப்பூச திருவிழாவையொட்டி ஆலத்தூர் தாலுகா, செட்டிகுளத்தில் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் 2 தேர்களின் தேரோட்டம் 2-வது நாளாக நேற்றும் நடந்தது. தேர்களை மாலை 4.15 மணியளவில் வடம் பிடித்து தேரோடும் வீதிகளின் வழியாக இழுத்த சென்ற பக்தர்கள், மாலை 6 மணியளவில் தேர்களை நிலைக்கு கொண்டு வந்தனர். இரவு 7 மணிக்கு கோவிலில் தீர்த்தவாரி நடந்தது. இதில் செட்டிகுளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பக்தர்கள் கலந்து கொண்டு சாமியை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். மேலும் அருகே மலை மீது உள்ள பிரசித்தி பெற்ற தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூசத்தையொட்டி சாமி கும்பிட திரளான பக்தர்கள் வந்தனர். மூலவர் முருகனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. ஏகாம்பரேஸ்வரர் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு பிச்சாண்டாவர் பறப்பாடும், இரவு 7 மணிக்கு கொடிய இறக்குதலும் நடக்கிறது. நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீர், விடையாற்றியுடன் கோவில் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது.
வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் இந்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ள பிரசித்தி பெற்ற வாலாம்பிகை உடனுறை வாலீஸ்வரர் கோவிலில் முருகனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதே போல் குன்னம், மங்களமேடு பகுதிகளை சுற்றியுள்ள கோவில்களிலும் தைப்பூசத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.