< Back
மாநில செய்திகள்
நீலகிரி
மாநில செய்திகள்

ஆடி அமாவாசையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு-திரளான பக்தர்கள் தரிசனம்

தினத்தந்தி
|
17 Aug 2023 1:15 AM IST

ஆடி அமாவாசையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஊட்டி

ஆடி அமாவாசையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி அமாவாசை

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் வரும் அமாவாசை தினம் இந்துக்களுக்கு மிகவும் முக்கிய தினமாகும். இதனால் இந்த தினத்தில் கோவில்களுக்கு சென்று வழிபடுதல், முன்னோர்களுக்கு தர்ப்பணம் மற்றும் காரியம் செய்தல், விரதம் இருத்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

நீலகிரி மாவட்டத்தில் ஆடி அமாவாசையையொட்டி மாவட்டம் முழுவதும் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான 17 கோவில்கள் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

சிறப்பு பூஜைகள்

ஊட்டி, பொக்காபுரம், மேல்கூடலூர் சந்தக்கடை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில்களில் காலை 6 மணிக்கு அபிஷேக, அலங்கார சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து மதியம் 12 மணிக்கு உச்சிகால தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் புதிதாக வாகனங்கள் வாங்கியவர்கள், வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றை கோயிலுக்கு எடுத்து வந்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.

இதேபோன்று ஊட்டி சுப்பிரமணிய சுவாமி, இரட்டை பிள்ளையார், எல்க்ஹில் முருகன், கூடலூர் சக்தி விநாயகர் உள்பட அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

இதேபோல் ஒரு சிலர் அதிகாலையில் எழுந்து, அவரவர் வழக்கப்படி காலைப் பொழுதின் வழிபாடுகளையெல்லாம் செய்துவிட்டு, முன்னோர் வழிபாட்டில் ஈடுபட்டனர். ஊட்டி மட்டுமின்றி மாவட்டம் முழுவதிலும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

மஞ்சக்கம்பை நாகராஜர் கோவில்

இதேபோல் மஞ்சூர் அருகே உள்ள மஞ்சகம்பையில் ஹெத்தையம்மன், சத்திய நாகராஜர் கோவில்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு நாகராஜர், ஹெத்தையம்மன் ஆகியோருக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் மகா தீபாராதனை நடத்தப்பட்டது. மேலும் குழந்தைகளை நாகராஜர் பாதத்தில் வைத்து ஆசிர்வாதம் வாங்கப்பட்டது. இதில் நீலகிரி மட்டுமின்றி கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய வெளி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்திருந்து பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மஞ்சூர் சக்தி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

மேலும் செய்திகள்