< Back
மாநில செய்திகள்
நெல்லையில், தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நெல்லையில், தமிழ் புத்தாண்டையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
14 April 2023 8:22 PM GMT

நெல்லையில் தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

நெல்லையில் தமிழ்புத்தாண்டையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

விசு கனி தரிசனம்

சோப கிருது தமிழ் புத்தாண்டு நேற்று சித்திரை மாதம் 1-ந்தேதி பிறந்தது. இதையொட்டி நேற்று அதிகாலையில் வீட்டின் பூஜை அறையில் பழங்களை வைத்து வழிபட்டனர். சித்திரை விசு கனி தரிசனம் செய்தனர். மேலும் கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தினார்கள்.

தாமிரபரணி ஆற்றிற்கு சென்று புனித நீராடி ஆற்றங்கரையில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்தனர்.

நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு கும்பம், ஹோமம் வைத்து சிறப்பு வழிபாடு நடந்தது. சோமாஸ் கந்தர் சன்னதியில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை, தீபாராதனை நடைபெற்றது. காலை 11 மணிக்கு நெல்லையப்பருக்கு அன்னாபிஷேகம் நடந்தது.

மாலையில் நெல்லையப்பருக்கு தங்க நாகாபரணமும், காந்திமதி அம்பாளுக்கு தங்க பாவாடையும் அணிவித்து வழிபாடு நடத்தப்பட்டது. மேலும் புதிய பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

உச்சிஷ்ட கணபதி

நெல்லை சந்திப்பு அருகே மணிமூர்த்தீஸ்வரம் உச்சிஷ்ட கணபதி கோவில் 1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த கோவில் ஆசியாவிலேயே 5 நிலை ராஜகோபுரமும் கொண்ட விநாயகருக்கென தனி ஆலயம் ஆகும்.

இங்கு தமிழ் புத்தாண்டையொட்டி சிறப்பு பூஜைகள் அதிகாலை முதல் நடந்தது. கோவிலில் சிறப்பு யாகசாலை அமைக்கப்பட்டு கணபதி ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூலவர் உச்சிஷ்ட கணபதிக்கு 26 வகையான அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகமும், மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது பின்னர் விநாயகருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இந்த கோவிலில் சித்திரை மாதம் முதல் நாள் தொடங்கி 3 நாட்களுக்கு சூரிய ஒளி நேராக மூலவர் மீது படும் அரிய நிகழ்வு நடைபெறும். அத்தகைய அரிய நிகழ்வு நேற்று நடைபெற்றது. சூரிய ஒளி சுவாமி மீது விழுந்தவுடன் பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சாலைக்குமாரசாமி கோவில்

இதேபோல் பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவில், ராஜகோபால சுவாமி கோவில், மேல வாசல் முருகன் கோவில், டவுன் சந்தி பிள்ளையார், கரிய மாணிக்க பெருமாள், குறுக்குத்துறை முருகன் கோவில், சந்திப்பு சாலைக்குமார சுவாமி, வண்ணார்பேட்டை பேராத்து செல்வி அம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் நேற்று தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

சேரன்மாதேவி

சேரன்மாதேவி - களக்காடு சாலையில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள நெல்லை ஸ்ரீமத் பரசமய கோளரி நாதர் ஆதின கொழுந்து மாமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதிகாலை நடைதிறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

சீவலப்பேரி

பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரி சுடலை மாடசுவாமி கோவிலில் நேற்று கொடை விழா நடைபெற்றது. பேச்சி, பிரம்மசக்தி, சுடலை மாடசுவாமி, முண்டன் சுவாமி, புதியவன் சுவாமி ஆகியோருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. மதியம் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதையொட்டி நெல்லை பொருட்காட்சி திடல் பஸ் நிலையத்தில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

எட்டெழுத்து பெருமாள்

இதேபோல் நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், கோசாலை கிருஷ்ணர், காட்டு ராமர் கோவில், ஜடாயு தீர்த்தம் உள்ளிட்ட கோவில்களுக்கு பக்தர்கள் சென்று வழிபட்டனர்.

மேலும் செய்திகள்