பெரம்பலூர்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
|கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு வழிபாடு
சோபகிருது தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று அதிகாலை நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலையிலேயே பக்தர்கள் கோவிலுக்கு சென்று பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். இதனால் பல கோவில்களில் காலை நேரத்தில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
பெரம்பலூரில் உள்ள அகிலாண்டேசுவரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் 61-வது ஆண்டு சித்திரை திருவிழா நேற்று நடந்தது. மேலும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோவிலில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், அகிலாண்டேசுவரி, கணபதி, முருகன், காசிவிஸ்வநாதர், அன்னபூரணி மூலவர் சிலைகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மேலும் சந்திரசேகரர்- ஆனந்தவல்லி, சுவாமி-அம்பாள், பஞ்சமூர்த்திகள், மாரியம்மன், செல்லியம்மன், வெள்ளந்தாங்கி அம்மன் உற்சவமூர்த்திகள் மகா மண்டபத்தில் வைக்கப்பட்டு, உற்சவ சிலைகளுக்கு மகாபிேஷகமும், பகலில் சுவாமிக்கு அலங்காரம், மகாதீபாராதனையும் நடந்தது. அபிஷேக, ஆராதனைகளை கவுரிசங்கர் சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.
வீதி உலா
மாலையில் சந்திரசேகரர்-ஆனந்தவல்லி அம்பாள் உற்சவமூர்த்திகள் வெள்ளி ரிஷப வாகனத்தில் வண்ண மலர்களால் அலங்கரித்து திருவீதி உலா விமரிசையாக நடந்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினருடன் இணைந்து நகர் நலச்சங்கத்தினர் செய்திருந்தனர். இதில் சித்திரை திருவிழா குழு தலைவர் ராஜாராம், செயலாளர் சோழா அருணாசலம், கோவில் முன்னாள் அறங்காவலர் வைத்தீஸ்வரன் மற்றும் திரளான பக்தர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் ெபரம்பலூரில் உள்ள பஞ்சபாண்டவருக்கு தனிசன்னதி கொண்ட மரகதவல்லி தாயார் சமேத மதனகோபால சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டையொட்டி பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருக்கு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. தாயாருக்கு வெள்ளிக்கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில்
பெரம்பலூர் எளம்பலூர் சாலையில் உள்ள பாலமுருகன் கோவிலில் அதிகாலையில் பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகங்களும், தீபராதனையும் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர் ரமேஷ்குருக்கள் நடத்தினார். இதேபோல பெரம்பலூரை அடுத்த குரும்பலூரில் உள்ள தர்மசம்வர்த்தனி சமேத பஞ்சநதீஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜைகளும், வழிபாடும் நடந்தது. இதில் பெரம்பலூர், குரும்பலூர், ஈச்சம்பட்டி, பாளையம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை சிவசுப்ரமணிய சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார் குழுவினர் நடத்தினர்.
பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கடந்த 5-ந்தேதி நடந்தது. தற்போது கோவிலில் மண்டல பூஜை நடைபெற்று வருகிறது. தமிழ் புத்தாண்டான நேற்று கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மதியம் நடந்த உச்சி கால பூஜையில் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. அப்போது பக்தர்கள் பயபக்தியுடன் அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவ அம்மன் எழுந்தருளிய தங்கத்தேர் உபயதாரர்களால் இழுக்கப்பட்டது. வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.