< Back
மாநில செய்திகள்
நாமக்கல்
மாநில செய்திகள்

பங்குனி மாத கிருத்திகையையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
26 March 2023 12:15 AM IST

நாமக்கல் மாவட்டத்தில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

நாமக்கல் ஆஞ்சநேயர்

நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று பங்குனி மாதம் 2-வது சனிக்கிழமையை யொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடத்தப்பட்டது.

இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியர்கள் சாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தங்க கவச அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் நாமக்கல் மட்டும் இன்றி பிற மாவட்டங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

கதிர்மலை கந்தசாமி

மோகனூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில், பங்குனி மாத வளர்பிறை கிருத்திகையையொட்டி பல்வேறு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து விசேஷ பூஜை செய்து, மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி, தங்க கவசத்திலும், பாலப்பட்டி கதிர்மலை கந்தசாமி வெள்ளிக் கவசத்திலும், வேட்டுவம்பாளையம் முருகன் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். விழாவில் அந்தந்த பகுதியில் உள்ள பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

காளிப்பட்டி கந்தசாமி

சேலம், நாமக்கல் மாவட்ட எல்லையான காளிப்பட்டியில் அமைந்துள்ள கந்தசாமி கோவிலில் பங்குனி மாத கிருத்திகையையொட்டி முருகனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு பால், மோர், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து ரோஜா, சம்பங்கி, துளசி பலவிதமான மலர்களால் கோவிலில் முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டது.

மேலும் சாமிக்கு முத்தங்கி மற்றும் ராஜ அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஆட்டையாம்பட்டி, மல்லசமுத்திரம் சுற்று பகுதியில் உள்ள திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக கோவில் முன் விளக்கேற்றி உப்பு, மிளகு, சிவப்பு தூவி சாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனையடுத்து இரவு வள்ளி தெய்வானையுடன் முருகன் பல்லக்கில் திருவீதி உலா கோவிலை சுற்றி நடைபெற்றது.

மேலும் செய்திகள்