< Back
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
7 March 2023 1:30 AM IST

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

கீரமங்கலம்:

மாசி மக திருவிழா

மாசி மகத்தையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் கீரமங்கலம் அருகே குளமங்கலம் கிராமத்தில் வில்லுனி ஆற்றங்கரையில் உள்ள பெருங்காரையடி மிண்ட அய்யனார் கோவிலில் மாசிமக திருவிழா நேற்று முன்தினம் கிராமத்தினரின் சிறப்பு வழிபாடு மற்றும் பிரமாண்ட குதிரை சிலைக்கு மாலை அணிவித்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

இதைத்தொடர்ந்து 2 நாட்களாக நேர்த்திக்கடன் செலுத்தும் பக்தர்கள் குதிரை சிலைக்கு காகிதப்பூ மற்றும் மலர் மாலைகள் அணிவித்தனர். குதிரை சிலை முழுமையாக மறையும் நிலையில், மாலைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்கப்பட்டது. சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாலைகள் குதிரை சிலைக்கு அணிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தெப்பத்திருவிழா

திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். இதையொட்டி கீரமங்கலம், கொத்தமங்கலம், குளமங்கலம், பனங்குளம் உள்பட பல கிராமங்களிலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இன்று(செவ்வாய்க்கிழமை) இரவு தெப்பத்திருவிழா நடக்கிறது. திருவிழாவையொட்டி கீரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையில் புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், கரூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆவுடையார்கோவில்

இதேபோல் ஆவுடையார்கோவில் அருகே சித்தக்கூரில் உள்ள பிரசித்தி பெற்ற சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு நேற்று யாகம் வளர்க்கப்பட்டது. இதையடுத்து யாகத்தில் வைத்திருந்த கடங்களை கோவிலை சுற்றி எடுத்து வந்து, சேவுகப்பெருமாள் மற்றும் பதினெட்டாம்படி கருப்பர் சுவாமிகளுக்கு கடங்களில் இருந்த புனிதநீரை ஊற்றி அபிஷேகம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது. ேமலும் அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு வெள்ளிக்கவசம் உள்ளிட்டவையும், அய்யனாருக்கு தங்க வைர கிரீடம், அம்பாளுக்கு தங்க, வைர பூரண கிரீடம், தங்க வைர பொற்கொடி கிரீடம், அய்யனாருக்கு தங்க ருத்ராட்ச மாலை உள்ளிட்டவையும் சாத்தப்பட்டது.

மேலும் திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான ஆவுடையார்கோவில் அருகே கருங்காட்டில் உள்ள புலிக்குட்டி அய்யனார் கோவிலில் மாசி மக திருவிழா நடைபெற்றது. விழாவில் புலிக்குட்டி அய்யனார், கருங்காளியம்மன், காத்தான், சாம்பான் சுவாமிகளுக்கு அர்ச்சனைகள் செய்து, பக்தர்கள் வழிபட்டனர். மேலும் புலிக்குட்டி அய்யனாருக்கு காவடி எடுத்து வந்து, அக்னியில் இறங்கினார்கள். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திருவரங்குளம்

மாசி மகத்தை முன்னிட்டு திருவரங்குளத்தில் உள்ள பெரியநாயகி அம்பாள் சமேத அரங்குளநாதர் கோவிலில் இருந்து சுவாமி-அம்பாளை, மேளதாளம் வாண வேடிக்கையுடன் ஊர்வலமாக தெப்பக்குளத்திற்கு கொண்டு சென்றனர். அங்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தீர்த்தவாரி நடந்தது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர். மதியம் கோவிலில் மண்டகப்படிதாரர்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது.

கீரனூர்

மாசி மகத்தை முன்னிட்டு கீரனூர் அருகே உள்ள வாலியம்பட்டி சக்தி வடிவேலன் கோவிலில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து வழிபட்டனர். தீமிதி நிகழ்ச்சி நடந்தது. பின்னர் அன்னதானமும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்