திருநெல்வேலி
மகா சிவராத்திரியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
|நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் மகா சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மூலைக்கரைப்பட்டி
நெல்லை மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே உள்ள செண்பகராமநல்லூர் சவுந்தர்யநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதையொட்டி மகா கணபதி ஹோமம், சுவாமி, அம்மன் மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு அபிஷேகம், கும்பாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து அலங்கார தீபாராதனை, அன்னதானம், சனிப்பிரதோஷ வழிபாடு, பக்தர்கள் செண்பகவிநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்து வருதல், சுவாமி-அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா, நள்ளிரவு சிவபெருமானுக்கு கங்கை, ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் இருந்து தீர்த்தங்கள் கொண்டு வரப்பட்டு அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை செண்பகராமநல்லூர் சிவபக்தர்கள் சங்கத்தினர் செய்திருந்தனர்.
உவரி சுயம்புலிங்க சுவாமி கோவில்
தமிழ்நாட்டில் உள்ள சிவாலயங்களில் பழமையானது உவரி சுயம்புலிங்கசுவாமி கோவில் ஆகும். இங்கு சுவாமி மூலவர் சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இக்கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு தென் தமிழ்நாடு சேவாபாரதி சார்பில் 1,008 சிவலிங்க பூஜை நடந்தது. வெள்ளியங்கிரி மலை ஸ்ரீசைத்தன்யானந்த மகாராஜ் தலைமை தாங்கி சிவலிங்க பூஜையை தொடங்கி வைத்தார். பெண்கள் சிவலிங்கத்திற்கு சுலோகங்கள் சொல்லி பூக்கள் மற்றும் வில்வை இலை தூவி பிராத்தனை செய்தனர்.
பின்பு சுவாமி சந்திரசேகரர், மனோன்மணி அம்பிகை சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இதில் திரளானவர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன், சேவாபாரதி மாநில ஒருங்கிணைப்பாளர் முத்துசெல்வி மற்றும் பொறுப்பாளர்கள் செய்திருந்தனர்.
முக்கூடல்
சிவராத்திரியை முன்னிட்டு முக்கூடல் பகுதியில் உள்ள கோவில்களில் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முக்கூடல் முத்துமாலையம்மன் கோவில் மற்றும் ஆலடி அம்மன் கோவில், சடையப்பபுரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் சிவராத்திரி சிறப்பு பூஜை நடைபெற்றது.
பூமி காவல பெருமாள் கோவிலில் இரண்டு நாள் நடைபெற்ற சிவராத்திரி திருவிழாவில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதேபோல் பல்வேறு கோவில்களில் சிவராத்திரிையயொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு பஸ்கள்
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிவராத்திரி மகாபிரதோஷத்தையொட்டி நெல்லை, சங்கரன்கோவில் பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
இந்த சிறப்பு பஸ்கள் அன்று இரவு 8 மணிக்கு புறப்பட்டு பஞ்சபூத சிவன் கோவில்களான தாருகாபுரம், சங்கரன்கோவில், கரிவலம்வந்தநல்லூர், தென்மலை, தேவதானம் ஆகிய கோவிலுக்கு இயக்கப்பட்டன.
நெல்லை புதிய பஸ் நிலையத்திலிருந்து மாலை 6 மணிக்கு நவகைலாய சிவன் கோவில்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த பஸ்களை போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மோகன் தொடங்கி வைத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இதில் ஏராளமான பயணிகள் சிவன் கோவிலுக்கு சென்று வந்தனர்.