அரியலூர்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
|கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
ஆடிப்பூர விழா
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆடிப்பூரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அரியலூர் உள்ள மாரியம்மன், காளியம்மன், திரவுபதி அம்மன் கோவில்களில் ஆடிப்பூர விழா நடைபெற்றது. இதை முன்னிட்டு தேச பத்து மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் பஸ் நிலையம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுத்தும், சுமார் 20 அடி நீள அலகு குத்தியும் வந்தனர். கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, வழிபாடு நடத்தினர்.
அரியலூர் குறிஞ்சான் குளத்தெருவில் உள்ள கோவிலில் பெரியநாயகி அம்மனுக்கு பல வண்ண வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதில் பக்தர்கள் அம்மனை வழிபட்டு சென்றனர்.
வி.கைகாட்டி, செந்துறை
வி.கைகாட்டி அருகே காத்தான்குடிகாடு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலுக்கு நேற்று காலை வளையல், ஊஞ்சல் உள்ளிட்ட பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். பின்னர் அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஊஞ்சலில் வீற்றிருந்த அம்மனுக்கு வளையல் அணிவித்து, தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
செந்துறை அருகே உஞ்சினி கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொப்பாட்டி அம்மன் கோவிலில் கொப்பாட்டி அம்மன், பாவாயி அம்மன், பாப்பாத்தி அம்மன் உள்ளன. இந்த கோவிலில் ஆடிப்பூர திருவிழாவையொட்டி சிறப்பு யாகம் நடந்தது. அம்மன்களுக்கு சிறப்பு அபிஷேகத்தை தொடர்ந்து சந்தனக் காப்பு, வலையல் காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.