< Back
மாநில செய்திகள்
கோவில்களில் சிறப்பு வழிபாடு
பெரம்பலூர்
மாநில செய்திகள்

கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
5 Aug 2023 12:44 AM IST

கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

சிறப்பு வழிபாடு

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் என்பதால் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். இந்நிலையில் ஆடி மாதம் 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி நேற்று பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் மதியம் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் கோவில் உள்பிரகாரத்தில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது.

பால்குட ஊர்வலம்

பெரம்பலூர் சங்குபேட்டையில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலுக்கும், பெரம்பலூர் புதிய மதனகோபாலபுரத்தில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலுக்கும் விரதமிருந்த பக்தர்கள் தனித்தனியாக வெற்றி விநாயகர் கோவிலில் இருந்து பால்குடத்தை தலையில் சுமந்து உடுக்கை, தாரை, தப்பட்டை முழங்க முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று அந்தந்த கோவில்களை வந்தடைந்தனர்.

பின்னர் பக்தர்கள் கொண்டு வந்த பாலால் அந்தந்த கோவில்களில் உள்ள அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

குத்துவிளக்கு பூஜை

ஆடி மாத 3-வது வெள்ளிக்கிழமையையொட்டி பெரம்பலூர் பூசாரி தெருவில் உள்ள ரேணுகாம்பாள் கோவிலிலும், பெரம்பலூர் தெப்பக்குளம் அருகே உள்ள அய்யப்பன் கோவிலிலும் நடந்த குத்துவிளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். குன்னம் தாலுகா, சு.ஆடுதுறையில் உள்ள குற்றம் பொறுத்தீஸ்வரர் கோவிலில் சுகந்த குந்தலாம்பிகைக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். குன்னத்தில் உள்ள ஆயிரவல்லி அம்மன் கோவிலில் அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்