திண்டுக்கல்
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|திண்டுக்கல்லில் பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பிரதோஷ நாட்களில் சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி மாலை 4 மணியளவில் சுவாமி காளகத்தீசுவரர், நந்திக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது.
அதன்பிறகு வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, கோவில் உட்பிரகாரத்தில் 3 முறை வலம் வந்தார். இதைத்தொடர்ந்து தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இதேபோல் திண்டுக்கல் கோபால சமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், செட்டிநாயக்கன்பட்டி மற்றும் முள்ளிப்பாடி சிவன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.