< Back
மாநில செய்திகள்
சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
20 March 2023 12:30 AM IST

திண்டுக்கல் மாவட்டத்தில் பிரதோஷத்தையொட்டி சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் பங்குனி மாத மகா பிரதோஷத்தையொட்டி நேற்று சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாலை 4 மணி அளவில் சுவாமி காளகத்தீசுவரர், நந்திக்கு பால், பன்னீர், சந்தனம் உள்பட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரம், பூஜை, தீபாராதனை நடந்தது. பின்னர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி எழுந்தருளி கோவில் உட்பிரகாரத்தில் வலம் வந்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் திண்டுக்கல் கோபாலசமுத்திரம் 108 நன்மை தரும் விநாயகர் கோவில், நாகல்நகர் ரெயிலடி சித்தி விநாயகர் கோவில், செட்டிநாயக்கன்பட்டி மற்றும் முள்ளிப்பாடி சிவன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

பழனி பெரியாவுடையார் கோவில், மலைக்கோவிலில் உள்ள கைலாசநாதர் சன்னதி, பெரியநாயகி அம்மன் கோவிலில் உள்ள சிவன் சன்னதி, பட்டத்து விநாயகர் கோவிலில் உள்ள சிவன் சன்னதி உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பிரதோஷத்தையொட்டி சுவாமி, நந்தி பெருமானுக்கு பால், பழம், பன்னீர், திருநீறு உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதேபோல் நத்தம் கோவில்பட்டியில் உள்ள கைலாசநாதர் கோவிலில் மூலவர் செண்பகவல்லி சமேத கைலாசநாதருக்கும் சிறப்பு பூஜைகளும், தீபாராதனைகளும் நடந்தது. பின்னர் அங்குள்ள நந்தி சிலைக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

Related Tags :
மேலும் செய்திகள்