காஞ்சிபுரம்
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|கோவில் நகரமான காஞ்சீபுரத்தில் புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
3-வது சனிக்கிழமை
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் 3-வது சனிக்கிழமையான நேற்று மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் பெருமாள் கோவில்களில் எளிமையாக அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த நிலையில் இந்த ஆண்டு காஞ்சீபுரத்தில் புகழ்பெற்ற வரதராஜ பெருமாள் கோவில், உலகளந்த பெருமாள் கோவில், வைகுண்டபெருமாள் கோவில், யதோக்தகாரி பெருமாள் கோவில், அழகிய சிங்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.
சாமி தரிசனம்
கூழமந்தல் பேசும் பெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத பேசும் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அலங்காரம், மகா தீபாராதனைகள் நடைபெற்றது.
சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உத்திரமேரூர்
உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட கருணீகர் தெருவில் அமைந்துள்ள பஜனை கோவிலின் 25-வது ஆண்டு புரட்டாசி மாத கருடசேவை திருவிழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று காலை சாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.
இதனை தொடர்ந்து சாமி கோவிலில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். பின்னர் சிறப்பு பூஜைகள் முடிந்த பின் கோவிலில்இருந்து புறப்பட்ட பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி கருணீகர் தெரு, திருமலையா பிள்ளைத் தெரு, செங்குந்தர் தெரு, மேட்டுத்தெரு, பஜார் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
பக்தர்கள் தேங்காய் உடைத்தும் தீபாராதனை காண்பித்தும் சாமியை வழிபட்டனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் ஊராட்சியில் முதலியாண்டன் கோவில் மடம் உள்ளது. அங்குரங்கநாதர் சயன கோலத்தில் பாம்பின் மீது படுத்திருப்பார். புரட்டாசி மாதம் 3-வது சனிக்கிழமையையொட்டி நேற்று ரங்கநாதர் கருடவாகனத்தில் 4 மாடவீதிகளில் உலா வந்தார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.