பெரம்பலூர்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
1 லட்சத்து 8 வளையல்களை கொண்டு...
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடுகள் நடந்தது. வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பிரசித்தி பெற்ற இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் வாலாம்பிகை சமேத வாலீஸ்வரர் கோவிலில் உள்ள வாலாம்பிகை அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆடிப்பூரத்தையொட்டி நேற்று காலை வாலாம்பிகை அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் மகா சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் மாலையில் அம்மனுக்கு வளையல் காப்பு பூஜை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் கொடுத்த மொத்தம் 1 லட்சத்து 8 வளையல்களை கொண்டு சிவாச்சாரியார் செல்லப்பா தலைமையில் சிவாச்சாரியார்கள் அம்மனுக்கு அலங்காரம் செய்தனர். பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட திரளான பக்தர்கள் அம்மனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் வழிபாடு
அம்மனுக்கு வளையல் காப்பு பூஜையில் கலந்து கொண்டால் திருமண தடை நீங்கும், குழந்தைப்பேறு கிடைக்கும் என்பது பக்தர்களின் ஐதீகம். இதனால் திருமண வரம் வேண்டி வழிபடும் பக்தர்கள் அம்மன் வளையல் காப்பு பூஜைக்கு வளையல்கள், திருமாங்கலய சரடு, மஞ்சள், குங்குமம் உள்ளிட்டவை வாங்கி கொடுத்து, நெய் தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர். இதேபோல் குழந்தை பேறு வேண்டியும் பக்தர்கள் அம்மனுக்கு வளையல், தொட்டில் வாங்கி கொடுத்து, நெய் தீபம் ஏற்றி வழிபட்டனர். அவர்களுக்கு வளையல்கள் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.
வாலிகண்டபுரத்தில் உள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் உள்ள கோதை ஆண்டாளுக்கு ஆடிப்பூரத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு திருமஞ்சனம் செய்யப்பட்டு, நேற்று காலை தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னர் கோதை ஆண்டாளுக்கு வளையல் காப்பு பூஜை நடத்தப்பட்டது.
தங்கத்தேர்
ஆடிப்பூரத்தையொட்டி பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பிரசித்தி பெற்ற மதுரகாளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மாலையில் தங்கத்தேர் இழுக்கப்பட்டது. பெரம்பலூர் புறநகர் பகுதியான துறைமங்கலம் புதுக்காலனியில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தையொட்டி நேற்று மாலை அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டது. மேலும் கோவிலில் நடந்த குத்து விளக்கு பூஜையில் பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.