< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சேலம்
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
22 July 2023 1:26 AM IST

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சேலத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கோட்டை மாரியம்மன்

ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழா களைகட்டும். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமையில் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் செல்வதுண்டு. பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபாடு செய்வார்கள். அதன்படி கடந்த 17-ந் தேதி ஆடி மாதம் பிறந்தது. அன்றைய தினம் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.

ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று சேலம் மாவட்டத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் பால், தயிர், பன்னீர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து தீபாராதனை நடைபெற்றது.

வளையல் அலங்காரம்

ஆடி முதல் வெள்ளி என்பதால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து அம்மனை தரிசனம் செய்தனர். சிறப்பு கட்டண தரிசனத்திலும் பக்தர்கள் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். சில பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் கூழ் காய்ச்சி அதனை பக்தர்களுக்கு வழங்கினர்.

இதேபோல், குமாரசாமிப்பட்டி எல்லைப்பிடாரியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் மற்றும் தங்கக்கவசம் சாத்தப்பட்டது. தொடர்ந்து நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அஸ்தம்பட்டி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு தங்கக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை நடந்தது.

சிறப்பு பூஜை

சேலம் நெத்திமேடு தண்ணீர் பந்தல் காளியம்மனுக்கு ஒரு லட்சம் வளையல்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதையொட்டி நடந்த சிறப்பு பூஜையில் நெத்திமேடு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

சேலம்- பெங்களூரு பைபாஸ் சாலையில் உள்ள வனக்காளியம்மன் கோவிலில் ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. சேலம் குரங்குச்சாவடி செங்கல்பேட்டையில் உள்ள மாரியம்மன் கோவிலும் சிறப்பு பூஜை நடந்தது.

மாவட்டம் முழுவதும்

இதேபோல், பெரமனூர் மாரியம்மன், சேலம் அய்யந்திருமாளிகை மாரியம்மன், குகை காளியம்மன், மாரியம்மன், செவ்வாய்பேட்டை மாரியம்மன், அன்னதானப்பட்டி மாரியம்மன், பொன்னம்மாபேட்டை மாரியம்மன் உள்பட மாநகரில் உள்ள அம்மன் கோவில்களில் நேற்று ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.இதில், அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கோவிலுக்கு சென்று அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல், மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோவில்களிலும் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது.

மேலும் செய்திகள்