< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திண்டுக்கல்
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
22 July 2023 1:00 AM IST

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. கூழ் படைத்து பெண்கள் சாமி தரிசனம் செய்தனர்.

ஆடி வெள்ளி

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம் ஆகும். இதையொட்டி ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.

அதன்படி திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையொட்டி அதிகாலை 4 மணியளவில் கோவில் நடை திறக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து 5.30 மணியளவில் இருந்து காலை 11 மணிவரை பக்தர்கள் வழங்கிய பாலைக் கொண்டு அம்மனுக்கு தொடர்ந்து அபிஷேகம் நடந்தது.

கூழ் படைத்து வழிபாடு

அதன்பிறகு பகல் 12 மணியளவில் அம்மனுக்கு உச்சி கால பூஜை நடந்தது. இதில் பன்னீர், பஞ்சாமிர்தம், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து மாலை 6 மணி அளவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இரவு 7 மணியளவில் தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் அம்மன் எழுந்தருளி கோவில் பிரகாரத்தில் வலம் வந்தார்.

மேலும் ஆடி முதல் வெள்ளி என்பதால் ஏராளமான பெண்கள் கோவிலுக்கு வந்து அம்மனுக்கு கூழ் படைத்து சாமி தரிசனம் செய்தனர். பின்னர் கூழை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

அபிராமி அம்மன் கோவில்

அதேபோல் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையான நேற்று காலை 7 மணியளவில் அபிராமி அம்மன் மற்றும் ஞானாம்பிகை அம்மனுக்கு 16 வகையான சிறப்பு அபிஷேகம் நடந்தது.

அதைத் தொடர்ந்து ஆப்பிள், ஆரஞ்சு, சாத்துக்குடி உள்பட பல்வேறு வகையான பழங்களால் சன்னதி முழுவதும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பிறகு மாலை 4.30 மணியளவில் அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம், மகா தீபராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

திண்டுக்கல் நாகல்நகர் புவனேஸ்வரி அம்மன் கோவில், நத்தம் சாலை அஷ்டலட்சுமி கோவில், மலையடிவாரம் பத்ரகாளியம்மன் கோவில், தெற்கு ரத வீதி அங்காள பரமேஸ்வரி கோவில், கோவிந்தாபுரம் ருத்ரகாளியம்மன் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்பட திண்டுக்கல்லில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

கோபால்பட்டி, நத்தம்

கோபால்பட்டியில் உள்ள காளியம்மன் கோவிலில் விஷ்ணு துர்க்கைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. நத்தம் மாரியம்மன் கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.

பழனி முருகன் கோவில் உப கோவிலான பெரியநாயகியம்மன் கோவில், மாரியம்மன் கோவில், பழைய தாராபுரம் சாலை ரெணகாளியம்மன் கோவில், கச்சேரி புதுத்தெரு கூனக்காளியம்மன் கோவில், மாரியம்மன் கோவிலில் ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பண்ணைக்காடு மயான காளியம்மன் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.

Related Tags :
மேலும் செய்திகள்