< Back
மாநில செய்திகள்
அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
திருவாரூர்
மாநில செய்திகள்

அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு

தினத்தந்தி
|
22 July 2023 12:15 AM IST

ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

மன்னார்குடி:

ஆடி மாத வெள்ளிக்கிழமையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சிறப்பு வழிபாடு

ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடைபெறும்.இதில் பெண்கள் ராகு காலத்தில் விளக்கேற்றி அம்மனை வழிபட்டால் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும். துன்பங்கள் அகலும் என்பது ஐதீகம். அந்த வகையில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால் மன்னார்குடியில் உள்ள காமாட்சியம்மன் கோவில், மீனாட்சி அம்மன் கோவில், உப்புக்காரத்தெரு முத்துமாரியம்மன் கோவில், கணக்கன் தெரு ஏழை மாரியம்மன் கோவில், மேல ராஜ வீதி சிங்கமகா காளியம்மன் கோவில், உப்புகாரத்தெரு பாப்பார காளியம்மன் கோவில், பழைய தஞ்சை சாலை செல்வகாமாட்சியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து அம்மனை தரிசனம் செய்தனர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் அருகே உள்ள கோரையாறு கிராமத்தில் மகா காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள் பொடி, வாசனை திரவியங்கள் உள்ளிட்டவைகளாக அபிஷேகம் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல், சாத்தனூர் மகா மாரியம்மன் கோவில், காக்கையாடி அகிலாண்டேஸ்வரி அம்மன், நாகங்குடி திரவுபதை அம்மன், அரிச்சந்திரபுரம் அங்காளம்மன் மற்றும் கூத்தாநல்லூர் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

குடவாசல்

குடவாசல் அருகே சித்தாடி காத்தாயி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. முன்னதாக காத்தாயி அம்மனுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம், குங்குமம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

நாலாம்கட்டளை வடபத்ர காளியம்மன் கோவில், மேலப்பிடாகை மகா மாரியம்மன் கோவில், பிலாவடி மகாகாளியம்மன் கோவில், விஷ்ணுபுரம்மகா மாரியம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

மேலும் செய்திகள்