பெரம்பலூர்
விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|விநாயகர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
பெரம்பலூரில் பழைய பஸ் நிலையம் அருகே தினசரி காய்கறி மார்க்கெட் தெருவில் உள்ள கச்சேரி விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி விழா நடந்தது. இதனை முன்னிட்டு விநாயருக்கு சிறப்பு அபிஷேகமும், தீபாராதனையும் நடந்தது. மேலும் வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கணபதி வழிபாடும், மகாஆரத்தியும் நடந்தது. பூஜைகளை கோவில் அர்ச்சகர்கள் சஞ்சீவி, பிரசாத் நடத்தினர். இதில் காய்கறி வியாபாரிகள், பழைய பஸ் நிலைய வியாபாரிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோல் எளம்பலூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள ஓம் சிங்கவிநாயகர்-பரமேஸ்வரன் கோவிலில் சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு சுவாமிக்கு அபிஷேகங்கள் மற்றும் மகாதீபாராதனையும், சிறப்பு வழிபாடும் கோவில் நிர்வாக அறங்காவலர் சதாசிவம் தலைமையில் நடந்தது. பூஜைகளை லட்சுமணன் மற்றும் உதயகுமார் நடத்தினர். இதில் தொழில் கூட்டமைப்பின் (கிளஸ்டர்) நிர்வாகிகள், சிட்கோ உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், சிங்க விநாயகர் கோவில் சேவா அறக்கட்டளை பொறுப்பாளர்கள் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள், சிட்கோ தொழிற்பேட்டையை சேர்ந்த சிறு, குறு தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது.