திருச்சி
சந்தோஷ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு
|சந்தோஷ ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
கல்லக்குடி:
கல்லக்குடியில் உள்ள சந்தோஷ ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி மாத 4-வது சனிக்கிழமையையொட்டி சந்தோஷ ஆஞ்சநேயருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி நேற்று மதியம் அனுஞ்கை, விநாயகர் பூஜை, புண்ணியவாசனமும், அதைத்தொடர்ந்து கும்பபூஜை, வேதபாராயணம், 96 வகை திரவியங்கள் கொண்டு மகாசுதர்சன ஹோமம், லெட்சுமிநரசிம்மர் ஹோமம், நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. மாலையில் சுவாமிக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து, தீபாராதனை காட்டப்பட்டு, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் வழங்கப்பட்டது. பூஜைகள் சிவஆகம கண்ணன் சிவாச்சாரியார், ஆஞ்சநேய உபாசகர் நாராயணசாமி தலைமையில் நடந்தது. இதில் கல்லக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூர், கீழரசூர், கல்லகம், சன்னாவூர், வரகுப்பை, மேலரசூர், கே.கே.நகர், புதிய மற்றும் பழைய சமத்துவபுரங்கள், திருவள்ளுவர் நகர், காளியப்பன் காலனி உள்பட சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன், கிருபாகரன் ஆகியோர் செய்திருந்தனர்.இதேபோல் புள்ளம்பாடி ஸ்ரீ தேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பிரசாதமும், பொதுமக்களுக்கு சித்தர் சகாதேவன் தலைமையில் அன்னதானமும் வழங்கப்பட்டது.