திருச்சி
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு
|சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சமயபுரம்:
சிறப்பு அபிஷேகம்
சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் ஏராளமான பக்தர்கள் வந்து கோவில் வளாகத்தில் தங்கியிருந்து அதிகாலையில் அம்மனை தரிசனம் செய்வார்கள். இந்நிலையில் புரட்டாசி மாத மகாளய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதால் நேற்று அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் நீண்ட வரிசையில் நின்று கோவிலுக்குள் சென்று மூலஸ்தான அம்மனை பயபக்தியுடன் வணங்கினர்.
இந்நிலையில் கோவிலில் உற்சவர் மண்டபத்தில் உற்சவ அம்மனுக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், பன்னீர், மஞ்சள், சந்தனம், விபூதி, குங்குமம், திரவியபொடிகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகமும், அதைத்தொடர்ந்து சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
ரிஷப வாகனத்தில்...
இதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, அதிர்வேட்டுகள் ஒலிக்க அம்மன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி தேரோடும் வீதி, கடைவீதி வழியாக கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி உற்சவர் மண்டபத்தில் வாழை மரங்கள் மற்றும் தோரணங்கள் கட்டப்பட்டு கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் கல்யாணி மேற்பார்வையில், மணியக்காரர் பழனிவேல், கோவில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர். சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் மற்றும் ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவானைக்காவல், தா.பேட்டை
மகாளய அமாவாசையை முன்னிட்டு திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் உற்சவர்கள் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி வெள்ளி ரிஷப வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.
தா.பேட்டை பகுதியில் மகாளய அமாவாசையை முன்னிட்டு பொதுமக்கள் நீர்நிலைகளில் புனித நீராடி புரோகிதர்கள் மூலம் திதி கொடுத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர். மேலும் தா.பேட்டையில் பிள்ளாதுரை பெரியமாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், உடைப்புவாய் கருப்பண்ணசாமி, தேவானூர் ராஜகாளியம்மன், கரிகாலி மகாமாரியம்மன் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். காட்டுப்புத்தூர் அருகே உன்னியூர் கிராமத்தில் உள்ள கருப்பனார் கோவிலில் நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.