திருச்சி
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.
சிறப்பு பூஜை
புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு ெபருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதையொட்டி கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் காலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மூலவர் ரெங்கநாதர் சன்னதி, தாயார் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதியில் காலை, மதியம் மற்றும் இரவில் குறிப்பிட்ட நேரங்களில் மூலஸ்தான சேவை நடைபெற்றது. பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதமாக லட்டு வழங்கப்பட்டது.
மேலும் இக்கோவிலின் உபகோவிலான ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று லட்சுமிநரசிம்மரை தரிசனம் செய்தனர்.
சந்தனக்காப்பு அலங்காரம்
இதேபோல், திருச்சி தலைமை தபால் நிலையம் அருகே உள்ள சஞ்சீவி ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று காலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து சந்தனக்காப்பு அலங்காரத்தில் மூலவர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அத்துடன் கோவிலில் ெரங்கநாயகி சமேத ரெங்கநாத சுவாமி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மதியம் சிறப்பு பூஜை முடிந்ததும், அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவில், பொன்மலை அடிவாரம் விஜயராகவ பெருமாள் கோவில், பாலக்கரை நவநீத கிருஷ்ணன் கோவில், தாராநல்லூர் வரதராஜ பெருமாள் கோவில், நடுகுஜிலித்தெரு சீனிவாச பெருமாள் கோவில், தீரன்நகர் ஒப்பில்லா பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் களிலும் சிறப்பு பூஜை நடைபெற்றது. மேலும் திருச்சி, தென்னூர் பட்டாபிராமன் பிள்ளை தெருவில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் உலகளந்த பெருமாள் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பிற கோவில்களில் உள்ள பெருமாள் சன்னதியிலும் நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.
தா.பேட்டை
தா.பேட்டையில் ருக்மணி, சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி, பிள்ளாபாளையம் நரசிங்க பெருமாள், உத்தண்டம்பட்டி கிராமத்தில் பூமாதேவி, நீலாதேவி சமேத கலியுக ராஜகோபால் சுவாமி, மாவலிப்பட்டி கிராமத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வேணுகோபாலசுவாமி உள்ளிட்ட கோவில்களில் நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. சுவாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நீலியாம்பட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற தலைமலையில் உள்ள சஞ்சீவிராய நல்லேந்திர பெருமாள் கோவில், அடிவாரத்தில் உள்ள பூமிதேவி, நீலாதேவி சமேத லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் பூஜைகள் நடந்தன. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.