பெரம்பலூர்
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்ததாகும். இந்த மாதத்தில் பக்தர்கள் அசைவ உணவை தவிர்த்து சைவ உணவு மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது வழக்கம். பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும். இருப்பினும் புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் பிரசித்தி பெற்றவை. இதனால் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும்.
அந்த வகையில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. இதனால் பெருமாள் கோவில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
மதனகோபாலசுவாமி
பெரம்பலூரில் உள்ள மரகதவல்லித்தாயார் சமேத மதனகோபாலசுவாமி கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று மூலவர் பெருமாளுக்கு பால், பன்னீர், சந்தனம், விபூதி, தயிர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பெருமாளுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலையில் உற்சவர் மதனகோபாலசுவாமி பாண்டியன் கொண்ைட அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரத்தில் பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதையொட்டி பெருமாளுக்கும், தாயாருக்கும் பால், பன்னீர், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
ஆஞ்சநேயர் கோவில்களிலும்...
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி பெரம்பலூர் மதனகோபாலசுவாமி கோவில் முன்பு உள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாற்றப்பட்டது. இதேபோல் ஆலத்தூர் தாலுகா பாடாலூரில் மலையில் உள்ள பூ மலை சஞ்சீவிராயருக்கும், மலை அடிவாரத்தில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.