தேனி
பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
|புரட்டாசி மாத சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாதம் என்றாலே, பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இதனால், இந்த மாதத்தின் ஒவ்வொரு சனிக்கிழமையும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான நேற்று தேனி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. தேனி என்.ஆர்.டி. நகரில் உள்ள கணேச கந்தபெருமாள் கோவிலில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். அல்லிநகரம் வரதராஜபெருமாள் கோவிலிலும் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
கதலிநரசிங்க பெருமாள் கோவில்
ஆண்டிப்பட்டி அருகே ஜம்புலிபுத்தூர் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழமையான கதலிநரசிங்க பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது.
இதையொட்டி அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டு, கதலிநரசிங்க பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்றும் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போடி சீனிவாச பெருமாள்
இதேபோல் போடி சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி நேற்று சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சுவாமிக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்து. இதேபோல் போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் தொட்ராயன் கோவிலிலும் நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
வரதராஜ பெருமாள் கோவில்
பெரியகுளம் தென்கரையில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி வரதராஜ பெருமாளுக்கு திருப்பதி திருவேங்கடமுடையான் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தென்கரை பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் கிருஷ்ணருக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. மேலும் தெற்கு அக்ரகாரத்தில் உள்ள நாமத்தவார் பிரார்த்தனை மையத்தில் கிருஷ்ணர்-ராதைக்கு துளசியால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
உத்தமபாளையம் யோகநரசிங்க பெருமாள் கோவிலில் ரெங்கநாதர், ஸ்ரீதேவி-பூதேவி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு நேற்று அருள் பாலித்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது.
கூடலூரில் உள்ள கூடலழகிய பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் வார சனிக்கிழமையையொட்டி, பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி- பூதேவி அம்மனுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. ராஜ அலங்காரத்ததில் பெருமாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் கம்பம் கம்பராயப்பெருமாள் கோவில், அன்னஞ்சி மலையடிவாரத்தில் உள்ள திம்மராயப்பெருமாள் கோவில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பெருமாள் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
கோவில்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கோவில் பகுதியில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டது.